உலகப் பெரும்பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
1987ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் இப்பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவாக இவ்வாண்டுப் பட்டியலில் மொத்தம் 3,428 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களின் ஒட்டுமொத்தச் சொத்து மதிப்பு 20.1 டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$25.6 டிரில்லியன்). சென்ற ஆண்டு அம்மதிப்பு 16.1 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
சாதனை அளவாக, பட்டியலில் இடம்பெற்றுள்ள 20 பேர் 12 இலக்கத்தில், அதாவது 100 பில்லியனுக்குமேல் சொத்து வைத்துள்ளனர்.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார் ‘டெஸ்லா’, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களின் உரிமையாளர் இலோன் மஸ்க். அவரது சொத்து மதிப்பு 839 பில்லியன் அமெரிக்க டாலர். 800 பில்லியனை எட்டிய முதல் மனிதர் அவர்தான்.
கூகல் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான லேரி பேஜ் (US$257 பில்லியன்), செர்கே பின் (US$237 பில்லியன்) முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளனர்.
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் (US$224 பில்லியன்) நான்காம் இடத்திலும் மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் (US$222 பில்லியன்) ஐந்தாமிடத்திலும் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 6.5 பில்லியன் டாலருடன் பட்டியலில் 645வது இடத்தில் இருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் பெருஞ்செல்வந்தர்கள்
கடந்த ஆண்டு 49ஆக இருந்த சிங்கப்பூர் பெருஞ்செல்வந்தர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 54ஆக உயர்ந்துள்ளது.
அட்வான்ஸ் செமிகண்டக்டர் எஞ்சினியரிங் நிறுவனத்தின் தலைவர் ஜேசன் சாங், சிங்கப்பூர் பெருஞ்செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 2025ஆம் ஆண்டு 6.6 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு 2026ல் 14.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் மைண்ட்ரே நிறுவனத்தின் லி ஸிட்டிங் பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 11.2 பில்லியன் டாலர்.
ஃபார் ஈஸ்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களும் சகோதரர்களுமான ஃபிலிப் இங்கும் ராபர்ட் இங்கும் அடுத்த இரண்டு நிலைகளில் உள்ளனர். அவர்களது சொத்து மதிப்பு முறையே 7.2 பில்லியன் டாலர் மற்றும் 7.1 பில்லியன் டாலர்.
சென்ற ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த ‘சீ’ நிறுவன உரிமையாளர் ஃபாரஸ்ட் லி, இம்முறை 6.8 பில்லியன் டாலருடன் ஐந்தாம் இடத்திற்கு இறக்கம் கண்டுள்ளார்.

