புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட்டின் இசை நிகழ்ச்சி தொடர்பான நுழைவுச்சீட்டு மோசடியில் ஒரு வாரத்திற்குள் குறைந்தது 54 பேர் $45,000க்கும் அதிகமான தொகையைப் பறிகொடுத்தனர்.
சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் அடுத்த ஆண்டு மார்ச் 2-4, 7-9 என ஆறு இரவுகளுக்கு டெய்லர் சுவிஃப்ட்டின் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
ஏறக்குறைய 300,000 ரசிகர்கள் டெய்லர் சுவிஃப்ட்டின் இசை விருந்தை நேரடியாகக் கண்டும் கேட்டும் இன்புறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான நுழைவுச்சீட்டுகளின் விலை $88 முதல் $1,288 வரை. ஆனாலும், இரண்டே நாள்களில் அவை அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
இந்நிலையில், டெய்லர் சுவிஃப்ட்டின் இசை நிகழ்ச்சி சிங்கப்பூரில் இடம்பெறும் நாள்கள் அறிவிக்கப்பட்டதும் அந்நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டு தொடர்பான மோசடிகளும் அதிகமாகியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இம்மாதம் 10ஆம் தேதி நிலவரப்படி, குறைந்தது 522 பேர் அத்தகைய மோசடிகளில் சிக்கி, குறைந்தது $518,000 பணத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு இத்தகைய மோசடிகளால் மொத்தம் 199 பேர் ஏமாற்றப்பட்டனர். மொத்தத்தில் அவர்கள் 175,000 வெள்ளியை அவர்கள் இழந்தனர்.