2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் மத்திய சமையற்கூடங்கள், உணவைச் சமைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவை மூலம் நச்சுணவு பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. மொத்தம் 55 உணவு நிறுவனங்கள் இத்தகைய பாதிப்புகளுக்குக் காரணமாக இருந்துள்ளன.
அதிக அளவிலான உணவைக் கையாள்வதோடு, அதனைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுவதற்கு முன்னதாகக் குறிப்பிட்ட காலத்துக்குப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய சூழல் இத்தகைய நிறுவனங்களுக்கு ஏற்படுவதே இதற்குக் காரணம் என்று தொற்றுநோய் தடுப்பு அமைப்பு தெரிவித்தது.
இதனால் உணவு தூய்மைக்கேடடைவதற்கான சாத்தியம் அதிகரிப்பதோடு, அது பலரைப் பாதித்து, மலக்குடல் மற்றும் வயிற்று வீக்க நோய்க்கு வழிவகுக்கிறது.
தற்போது பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போதிய கடைக்காரர்களைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்வதால் மத்திய சமையற்கூட முறையை நோக்கிச் செல்கின்றன.
எனவே, இத்தகைய இடங்களிலிருந்து மேலும் பல பாதிப்புகள் ஏற்படுவதில் வியப்பில்லை என்று தொற்றுநோய் தடுப்பு அமைப்பின் உணவு மற்றும் நோய் பரப்பும் கிருமிப் பிரிவின் இயக்குநர் லலிதா குருபாதம் கூறினார்.
நிலைமையைத் தொற்றுநோய் தடுப்பு அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஏதேனும் குறிப்பிட்ட துறையில் இத்தகைய பாதிப்புகள் அதிகரிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து கூட்டு அறிக்கைகள் வெளியிடப்படும் அல்லது அந்தத் துறை சார்ந்த ஊழியர்களுக்குக் கூட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மொத்தம் 113 மலக்குடல் மற்றும் வயிற்று வீக்க நோய்ப் பரவல்கள் தொடர்பாக இந்த அமைப்பு தீவிர விசாரணை நடத்தியது.
மூன்றில் இரண்டு பங்கு பாதிப்புகள், மாசடைந்த நீர் அல்லது உணவின் மூலம் பரவும் கிருமிகள் அல்லது நச்சுக்கிருமிகளால் ஏற்பட்டவை ஆகும். எஞ்சியவற்றில் பத்தில் ஒரு பங்கு பாதிப்புகள் உணவு சாராமல், மனிதரிடமிருந்து மனிதருக்கு நேரடியாகப் பரவியவை. மற்றவை பல்வேறு காரணங்களின் கலவையாகவோ அல்லது விசாரணைகளுக்குப் பிறகும் உறுதியான முடிவைக் கண்டறிய இயலாதவையாகவோ இருந்தன.
பதிவான நச்சுணவு பாதிப்புச் சம்பவங்களுக்கு நோரோவைரஸ், சால்மோனெல்லா மற்றும் குளோஸ்ட்ரிடியம் பெர்ஃபெரிஞ்சன்ஸ் ஆகிய மூன்று கிருமி வகைகளே காரணம் என்று தொற்றுநோய் தடுப்பு அமைப்பு கூறியுள்ளது.
உணவைக் கையாளும் ஊழியர்களின் மல மாதிரிகளில் நோய் பரப்பும் கிருமிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் பணி செய்யத் தற்காலிகத் தடை விதிக்கப்படுகிறது. இத்தடை நீக்கப்பட வேண்டுமாயின், குறைந்தபட்சம் ஒரு வார இடைவெளியில் எடுக்கப்படும் அடுத்தடுத்த இரண்டு மலப் பரிசோதனைகளிலும் கிருமிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட வேண்டும்.
பாதுகாப்பில் கவனக் குறைபாடுகள் அல்லது விதிமீறல்கள் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட உணவு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களின் வர்த்தகமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம்.

