சிங்கப்பூர்: பணிக்குத் திரும்ப 5,500 வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதி

சிங்கப்பூர்: பணிக்குத் திரும்ப 5,500 வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதி

2 mins read
80471056-5190-4280-8217-14a863da6479
சிங்கப்பூரில் உள்ள 40 தங்கும் விடுதிகளைச் சேர்ந்த 5,500 வெளிநாட்டு ஊழியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பலாம் என்று நேற்று முன்தினம் (ஜூன் 9) தெரிவிக்கப்பட்டது. அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து முடித்த பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. -

சிங்கப்பூரில் உள்ள 40 தங்கும் விடுதிகளைச் சேர்ந்த 5,500 வெளிநாட்டு ஊழியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பலாம் என்று நேற்று முன்தினம் (ஜூன் 9) தெரிவிக்கப்பட்டது. அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து முடித்த பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட்டதாக கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்த முதல் 60 விடுதிகளில் 40ஐ சேர்ந்த ஊழியர்கள் இவர்கள்.

இங்குள்ள மற்ற 20 விடுதிகளில் இருப்போர் பணிக்குத் திரும்ப அனுமதிப்பதற்கு முன்பு, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

மேலும் 30 விடுதிகள் கொவிட்-19 இல்லாத பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.

தேவையான தயார்நிலை நடவடிக்கைகளை முடித்த பிறகு அவற்றைச் சேர்ந்த 8,400 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர்.

கிருமித்தொற்றிலிருந்து விடுபட்ட 40,000 ஊழியர்களுடன் சேர்ந்து இவர்களும் பணிக்குத் திரும்புவதற்கான அதிகாரிகளின் அனுமதிக்காகக் காத்திருப்பர்.

பணிக்குத் திரும்ப தற்போது அனுமதி பெற்றுள்ள 5,500 ஊழியர்களின் நிறுவனங்கள் பணியைத் தொடங்க அனுமதி பெற்றதும், SGWorkpass செயலியில் அவர்களது AccessCode பச்சை நிறத்துக்கு மாறும்.

அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் SGWorkpass செயலியைப் பதிவிறக்குவது அவசியமாகும். அவர்களது AccessCode பச்சை நிறத்துக்கு மாறியதைக் காட்டினால் மட்டுமே அவர்கள் விடுதியிலிருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர்.

விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள் பணிக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவதற்கான மூன்று படி நடவடிக்கைகளை மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்டது.

- ஊழியர்களை வெவ்வேறு நேரங்களில் பணிக்கு அழைத்துச் செல்வது, விடுதிக்கு திரும்ப அழைத்து வருவது போன்ற ஏற்பாடுகளை முதலாளிகளுடன் சேர்ந்து விடுதிகள் ஏற்பாடு செய்வது

- தங்களது ஊழியர்கள் தங்கியிருக்கும் முகவரியை நிறுவன முதலாளிகள் மனிதவள அமைச்சின் தரவுத்தளத்தில் உறுதி செய்தல்

- FWMOMCare செயலியை ஊழியர்கள் பதிவிறக்கி, அவர்களது உடல்நலம், முகவரி பற்றிய தகவல்களைப் பதிவிடுவது

இரண்டாவது, மூன்றாவது படி நடவடிக்கைகள் நிறைவுறாததால் 20 விடுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணிக்குத் திரும்ப இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்பிலான கேள்விகளுக்கு நிறுவனங்கள் MOM_DormExit_Ops@mom.gov.sg என்ற மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளலாம்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்