கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ 57,300 மலேசியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்து சிங்கப்பூர் குடியுரிமையை ஏற்றுக்கொண்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி நிலவரப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 61,116 மலேசியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தகவலை மலேசியாவின் தேசிய பதிவகத்துறையின் தலைமை இயக்குநர் பட்ருல் ஹிஷாம் அலியாஸ் வெளியிட்டதாக மலேசிய நாளிதழான த நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 10,000 மலேசியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறப்பதாகத் திரு பட்ருல் தெரிவித்தார்.
குடியுரிமையைத் துறக்கும் மலேசியர்களில் கிட்டத்தட்ட 93.78 விழுக்காட்டினர் சிங்கப்பூர் குடியுரிமையை ஏற்றுக்கொண்டனர்.
அதற்கு அடுத்தபடியாக, 2.15 விழுக்காட்டினர் ஆஸ்திரேலியக் குடியுரிமையை ஏற்றுக்கொண்டனர்.
மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், அந்நாட்டவர்கள் இரு நாடுகளின் குடியுரிமையை வைத்திருக்க முடியாது.
சிங்கப்பூரில் இருநாடுகளின் குடியுரிமை கொண்டவர்களாக இருக்க 21 வயதுக்கும் மேற்பட்டோருக்கு அனுமதி கிடையாது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மலேசியக் குடியுரிமையைத் துறந்தவர்களில் பெரும்பாலானோர் மகளிர் மற்றும் சிறுவர்கள் என்று திரு பட்ருல் தெரிவித்தார்.
மொத்தம் 35,356 பெண்களும் சிறுவர்களும் மலேசியக் குடியுரிமையைத் துறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
குடியுரிமையைத் துறந்தவர்களில் பெரும்பாலானோர் 31 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த 19,287 பேர் மலேசியக் குடியுரிமையைத் துறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு அடுத்தபடியாக, ஆக அதிகமாக 21 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மலேசியக் குடியுரிமையைத் துறந்தனர். இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த 18,827 பேர் குடியுரிமையைத் துறந்தனர்.
குடியுரிமைத் துறப்புக்குப் பொருளியல் மற்றும் குடும்ப விவகாரங்களே முக்கியக் காரணங்கள் என்று திரு பட்ருல் கூறினார்.
சிங்கப்பூரர்களாக மாறிய மலேசியர்கள், சிங்கப்பூரில் கூடுதல் சம்பளம் ஈட்டும் சாத்தியம் அதிகம் இருப்பதால் அவ்வாறு செய்தனர் என்றார் அவர். அவர்களில் பலர் ஏற்கெனவே சிங்கப்பூரில் பணி புரிந்துகொண்டிருந்தவர்கள் என்று திரு பட்ருல் தெரிவித்தார்.

