தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆள்மாறாட்ட மோசடியில் $6.7 மில்லியன் பறிகொடுத்த மக்கள்

1 mins read
873c9582-c9ed-408c-b5ed-0e312e55a912
வங்கி அதிகாரிகளைப் போலவும் காவல்துறை அதிகாரிகளைப் போலவும் மோசடிக்காரர்கள் ஆள்மாறாட்டம் செய்து மோசடிகளில் ஈடுபட்டனர். - கோப்பு படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் சென்ற மாதம் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்ததாக 100க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்கள் பதிவாகின.

அந்த மோசடிகளில் சிக்கி ஏமாந்தோர் $6.7 மில்லியன் பணத்தை இழந்துள்ளனர்.

சிங்கப்பூரின் முன்னணி வங்கிகளான டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் ஆகியவற்றின் அதிகாரி என்று தம்மைக் கூறிக்கொண்டு மோசடிக்காரர்கள் தொலைபேசியில் அழைத்ததை நம்பி பொதுமக்கள் பணத்தை இழந்தனர்.

காவல்துறையும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வியாழக்கிழமை (அக்டோபர் 10) இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் இடம்பெற்று உள்ளது.

சந்தேகத்துக்கு இடமான வகையில் வங்கிக் கணக்கு அல்லது கடன்பற்று அட்டையில் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாகக் கூறிய மோசடிக்காரர்கள், அதனைச் சரிசெய்ய வாடிக்கையாளரின் விவரங்கள் வேண்டும் என கேட்டனர்.

விவரங்களைத் தெரிவித்த பின்னர் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு மோசடி அரங்கேற்றப்பட்டது.

வங்கி அதிகாரி என்று ஆள்மாறாட்டம் செய்வோரிடம் தகவல் தெரிவிக்க வாடிக்கையாளர் விரும்பாத வேளையில் தொலைபேசி அழைப்பு அரசாங்க அதிகாரிபோல பாசாங்கு செய்வோருக்கு மாற்றிவிடப்படும்.

வாட்ஸ்அப் காணொளி வாயிலாகத் தோன்றும் மோசடிக்காரர், காவல்துறை அல்லது சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அடையாள வில்லையைப் போல போலியாக அணிந்திருப்பார்.

அவரது பின்னணியில் இருக்கும் அம்சங்கள் உண்மையானவை போல இருக்கும் என்று மோசடி நடைபெறும் விதம் குறித்து கூட்டறிக்கையில் விளக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்