வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் (வீவக) புதிய ‘பிடிஓ’ திட்டங்களில் அமையும் கடைகளுக்கான வாடகை இல்லாக் காலம் (rent-free period) தற்போதைய இரண்டு மாதங்களிலிருந்து ஆறு மாதங்கள்வரை நீட்டிக்கப்படுகிறது.
கடைக்காரர்களுக்கு கூடுதல் ஆதரவளிக்கவும் புதிய பிடிஓ வீட்டுப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சமைத்த உணவுகளும் அத்தியாவசிய மளிகைப் பொருள்களும் தாமதமின்றி கிடைப்பதை உறுதிசெய்யவும் வீவக அறிமுகப்படுத்தும் புதிய முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த மாற்றங்களை தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் புதன்கிழமை (மார்ச் 4) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அறிவித்தார்.
இந்த நீட்டிப்பு காப்பிக் கடைகளுக்கும் பொருந்தும். காப்பிக் கடைகளுக்கான வாடகை இல்லாக் காலம் தற்போது உள்ள மூன்று மாதங்களிலிருந்து அதிகபட்சம் ஆறு மாதங்களாக உயர்த்தப்படுகிறது.
திருத்தப்பட்ட இந்த ஏலக்குத்தகை விதிமுறைகள் மார்ச் 2026 முதல் அமலுக்கு வரும். முழு ஆறு மாத சலுகையையும் பயன்படுத்திக்கொள்ள, கடை உரிமையாளர்கள் தங்கள் வணிக நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்கவேண்டும்.
நிதிச் சுமையைக் குறைப்பது மட்டுமின்றி, கடைகள் விரைவாகச் செயல்படத் தொடங்குவதை உறுதிசெய்யும் வகையில், வீவக தனது கட்டுமானக் காலக்கெடுவை மறுபரிசீலனை செய்துள்ளது. இதன்படி, முதல்கட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டுச் சாவிகளைப் பெறும் நேரத்திற்குள் கடைகளின் கட்டுமானப் பணிகளும் நிறைவடையும்படி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், காப்பிக் கடைகளின் வெளியே அமைந்துள்ள திறந்தவெளி உணவுப்பகுதிகளை (Outdoor Refreshment Areas) இனி வீவக முன்னதாகவே அமைத்துக் கொடுக்கும். இதன் மூலம் காப்பிக் கடை நடத்துபவர்களின் பொறுப்பும் செலவும் கணிசமாகக் குறையும். இந்த மாற்றத்தால் எட்டு மாதங்கள் வரை நேரச் சேமிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் செலவுகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வணிகங்களின் தொடக்கநிலை நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், கட்டம் கட்டமாக வாடகை செலுத்தும் முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு, முதல் இரண்டு ஆண்டுகளுக்கான வாடகை முறையே 80 விழுக்காடு, 90 விழுக்காடு என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், முக்கியமான முதல் ஆண்டின் வாடகை தற்போது 70 விழுக்காடாகக் குறைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, கடைக்காரர்கள் ஆரம்பத்தில் குறைந்த அளவிலான மளிகைப் பொருள்களுடனும் சமைத்த உணவுகளுடனும் வர்த்தகத்தைத் தொடங்கலாம். பின்னர், குடியிருப்பாளர்கள் கணிசமான அளவில் குடியேறியதும், முழுமையான சேவைகளை வழங்கலாம்.

