தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆறு புதிய தனித்தொகுதிகள், ஐந்து நீக்கம்

2 mins read
65767a7a-fc9a-4869-868d-b1fe13efaa83
தெங்கா வட்டாரம் சுவா சூ காங் குழுத்தொகுதியுடன் இணைக்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழு 6 புதிய தனித்தொகுதிகளை முன்வைத்திருப்பதோடு ஐந்து தனித்தொகுதிகளை நீக்கியுள்ளது.

புக்கிட் கொம்பாக், ஜாலான் காயு, ஜூரோங் சென்ட்ரல், குவின்ஸ்டவுன், செம்பவாங் வெஸ்ட், தெம்பனிஸ் சாங்காட் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் தனித்தொகுதிகள்.

புக்கிட் பாத்தோக், ஹொங் கா நார்த், மெக்பர்சன், பொங்கோல் வெஸ்ட், யுஹுவா ஆகியவை அகற்றப்பட்டுள்ளன.

இம்முறை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் மொத்தம் 15 தனித்தொகுதிகள் இருக்கும்.

2020 பொதுத் தேர்தலைவிட கூடுதலாக ஒரு தனித்தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

புக்கிட் பாஞ்சாங், ஹவ்காங், கெபுன் பாரு, மேரிமவுண்ட், மவுண்ட்பேட்டன், பயனியர், பொத்தோங் பாசிர், ராடின் மாஸ், இயோ சூ காங் ஆகிய தனித்தொகுதிகளில் எந்த மாற்றமும் இல்லை.

ஒட்டுமொத்தமாக 400,484 வாக்காளர்கள் 15 தனித்தொகுதிகளில் வாக்களிக்கத் தகுதிபெறுகின்றனர்.

நீக்கப்பட்ட தனித்தொகுதியில் பொங்கோல் வெஸ்ட்டும் ஒன்று.

பாசிர் ரிஸ்- பொங்கோல் குழுத்தொகுதி வளர்வதால் பொங்கோல் வட்டாரத்தின் சில பகுதிகள் பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியுடன் இணைக்கப்படுகிறது.

அதன் மூலம் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட புதிய பொங்கோல் குழுத்தொகுதி உருவாகிறது.

ஹொங் கா நார்த் தனித்தொகுதியும் வளர்ந்துள்ளது.

தெங்கா, புக்கிட் பாத்தோக் வெஸ்ட் குடியிருப்புப் பேட்டைகள் விரிவடைகின்றன.

அங்கு 45,586 வாக்காளர்கள் இருப்பதால் ஹொங் கா நார்த்தைத் தனித்தொகுதியாகக் கருத முடியாது என முடிவெடுக்கப்பட்டது.

எனவே தெங்கா வட்டாரம் சுவா சூ காங் குழுத்தொகுதியுடன் இணைக்கப்படுவதோடு புக்கிட் கொம்பாக், ஹில்வியூ ஆகியவற்றை உள்ளடக்கி புதிய புக்கிட் கோம்பாக் தனித்தொகுதி உருவாக்கப்படுகிறது.

ஹொங் கா நார்த் தனித்தொகுதியின் எஞ்சிய உட்பிரிவுகளும் புக்கிட் பாத்தோக், யுஹுவா தனித்தொகுதிகளின் உட்பிரிவுகளும் ஜூரோங் குழுத்தொகுதியுடன் இணைக்கப்படுகின்றன.

அது புதிய ஜூரோங் ஈஸ்ட்- புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி அமைய வழியமைக்கிறது.

செம்பவாங், தெம்பனிஸ் குழுத்தொகுதிகள் பெரிதாவதால் புதிய செம்பவாங் தனித்தொகுதியும் தென்பனிஸ் சாங்காட் தனித்தொகுதியும் அமைக்கப்படுகின்றன.

புதிய வீடமைப்புப் பேட்டைகளால் பிடாடாரி வட்டாரக் குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது.

எனவே போத்தோங் பாசிர் தனித்தொகுதியின் சில வாக்களிப்பு உட்பிரிவுகள் மரின் பரேட் குழுத்தொகுதிக்கு மாற்றப்படுகின்றன.

மெக்ஃபர்சன் தனித்தொகுதியும் அந்தக் குழுத்தொகுதியில் சேர்க்கப்படும்.

ஹார்பர்ஃப்ரண்ட், செந்தோசா வட்டாரங்களை ராடின் மாஸ் தனித்தொகுதி ஏற்றுக்கொள்ளும். அவை தற்போது வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் கீழ் உள்ளன.

தஞ்சோங் பாகார் குழுத்தொகுதியை 5 உறுப்பினர் கொண்ட குழுத்தொகுதியாகத் தக்கவைக்க அதிலிருந்து புதிய குவின்ஸ்டவுன் தனித்தொகுதி பிரித்தெடுக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்