6% வீவக மறுவிற்பனை வீடுகள் $1 மில்லியனுக்குமேல் விலைபோயின: சீ ஹொங் டாட்

6% வீவக மறுவிற்பனை வீடுகள் $1 மில்லியனுக்குமேல் விலைபோயின: சீ ஹொங் டாட்

2 mins read
7c8aa072-2767-4191-81e0-f3b3c48686a1
குறைந்தபட்சக் குடியிருப்புக் காலம் முடிவடைந்து அதிக அளவிலான வீடுகள் இவ்வாண்டு மறுவிற்பனைச் சந்தைக்கு வரும் என்றார் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 6 விழுக்காட்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகள் $1 மில்லியனுக்கும் அதிகமான விலைக்கு விற்கப்பட்டன.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) நாடாளுமன்றத்தில் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் இந்த விவரத்தைப் பகிர்ந்துகொண்டார்.

ஒட்டுமொத்த வீட்டு விலைகள் கடந்த ஆண்டு 2.9 விழுக்காடு என்ற விகிதத்தில் மெதுவாக வளர்ச்சியடைந்தது.

இருப்பினும், ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்ட வீவக மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை 54.7 விழுக்காட்டுக்கு அதிகரித்தது.

அதுகுறித்து தேசிய வளர்ச்சி அமைச்சு அக்கறை கொண்டுள்ளதா என்று பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் முஹைமின் அப்துல் மாலிக் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டார்.

அதற்குப் பதிலளித்த திரு சீ, தெம்பனிசிலும் பொங்கோலிலும் நான்கறை மறுவிற்பனை வீடுகள் கடந்த ஆண்டு $650,000லிருந்து $700,000 வரை விற்பனையாகின என்றார். அந்த வீடுகளின் குத்தகைக் காலம் 70 ஆண்டுகள் அல்லது அதற்குமேல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

செம்பாவாங், ஈசூன் வட்டாரங்களில் அதேபோன்ற மறுவிற்பனை வீடுகள் $600,000க்கும் குறைவாக விலைபோயின என்றும் ஜூரோங் வெஸ்ட், உட்லண்ட்ஸ் வட்டாரங்களில் அவை $550,000க்கும் குறைவாக விற்கப்பட்டன என்றும் திரு சீ சுட்டினார்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் $230,000 வரையிலான வீட்டு மானியங்களை வழங்குவதாகக் குறிப்பிட்ட திரு சீ, வீடு வாங்குவோர் செலுத்தவேண்டிய கட்டணத்தை அது கணிசமாகக் குறைப்பதாகத் தெரிவித்தார்.

வீடமைப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்ய புதிய தேவைக்கேற்ப, கட்டி விற்கப்படும் (பிடிஓ) வீடுகள் அதிக அளவில் கட்டப்படுகின்றன. அத்துடன், குறைவான காத்திருப்புக் காலத்துடன் கூடிய வீடுகளும் அவற்றில் அடங்கும்.

இதன் காரணமாக, வீவக மறுவிற்பனைச் சந்தை தொடர்ந்து மட்டுப்படும் என்று அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகத் திரு சீ கூறினார்.

குறைந்தபட்சக் குடியிருப்புக் காலம் முடிவடைந்து அதிக அளவிலான வீடுகள் இவ்வாண்டு மறுவிற்பனைச் சந்தைக்கு வரும் என்ற திரு சீ, அடுத்த ஈராண்டுகளில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்