தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

SG60: பேரங்காடிகளில் $6 பற்றுச்சீட்டுச் சலுகை

2 mins read
aa5815ea-14e9-4ecb-8e37-fc769d6ced7c
ஃபேர்பிரைஸ், ஜயண்ட், கோல்ட் ஸ்டோரேஜ், பிரைம் போன்ற பேரங்காடிகள் திருப்பித் தரும் பற்றுச்சீட்டுச் சலுகையை அறிவித்து உள்ளன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குறைந்தபட்சம் $60 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளைப் (CDC VOUCHERS) பயன்படுத்தி பொருள்கள் வாங்குவோருக்கு சிங்கப்பூரின் சில பேரங்காடிகள் $6 பற்றுச்சீட்டுகளைத் திருப்பித் தருவதாக அறிவித்து உள்ளன.

சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு வைர விழாவையொட்டி (SG60) சிங்கப்பூரர்களுக்கு அந்தச் சலுகையை வழங்க அந்தப் பேரங்காடிகள் முன்வந்துள்ளன.

ஒவ்வொரு சிங்கப்பூர்க் குடும்பமும் $300 மதிப்புள்ள சிடிசி பற்றுச்சீட்டுகளை வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) முதல் பெற்றுக்கொள்ளலாம்.

அந்தப் பற்றுச்சீட்டுகளில் பாதியை பேரங்காடிகளிலும் மீதியை சிடிசி பற்றுச்சீட்டுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள குடியிருப்பு வட்டாரக் கடைகளிலும் பயன்படுத்தி பொருள்களை வாங்கலாம்.

ஜயண்ட் பேரங்காடிக் கிளைகளிலும் சிஎஸ் ஃபிரஷ், ஜேசன்ஸ் டெலி உள்ளிட்ட கோல்ட் ஸ்டோரேஜ் கடைகளிலும் குறைந்தபட்சம் $60 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளை ஒரே ரசீதில் செலவிடுவோருக்கு $6 மதிப்புள்ள பற்றுச்சீட்டு திருப்பித் தரப்படும்.

அத்துடன், ‘yuu’ வெகுமதி கிளப் உறுப்பினர்களுக்கு $3 மதிப்புள்ள 600 ‘yuu’ போனஸ் புள்ளிகளும் அவர்களுக்குத் தரப்படும்.

இந்தச் சலுகை ஜனவரி 3 முதல் 9 வரை ஒரு வார காலத்திற்கு நடப்பில் இருக்கும்.

திருப்பித் தரப்படும் $6 பற்றுச்சீட்டைப் பயன்படுத்த விதிமுறை எதுவும் இல்லை. ஒரு பரிவர்த்தனைக்கு ஒரு பற்றுச்சீட்டு மட்டும் திருப்பித் தரப்படும். அந்த $6 பற்றுச்சீட்டை ஜனவரி 17 வரை பயன்படுத்தலாம்.

இதேபோன்ற சலுகையை ஃபேர்பிரைஸ் பேரங்காடியும் அறிவித்து உள்ளது.

“ஒவ்வொரு $60 மதிப்புள்ள சிடிசி பேரங்காடி பற்றுச்சீட்டுகளுக்கும் $6 பற்றுச்சீட்டு திருப்பித் தரப்படும். $60 பற்றுச்சீட்டுகளை ஒரே பரிவர்த்தனையில் செலவிட வேண்டும். இந்தச் சலுகையை எல்லா ஃபேர்பிரைஸ் கிளைகளிலும் ஜனவரி 3 முதல் 12 வரை பெற்றுக்கொள்ளலாம்,” என்பது அந்த அறிவிப்பு.

$6 பற்றுச்சீட்டுகளை அந்தக் கிளைகளில் பிப்ரவரி 28 வரை பயன்படுத்தலாம்.

அந்தச் சலுகை குறித்துப் பேசிய ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் சாவ்லா, “SG60 என்பது நாட்டுக்கு முக்கியமானதொரு மைல்கல். அதனை மேலும் சிறப்பாக்கும் வகையில் $6 பற்றுச்சீட்டுச் சலுகை தொடங்கப்பட்டு உள்ளது,” என்றார்.

SG60 கொண்டாட்டத்தின் தொடர்பில் கடந்த டிசம்பர் மாதமும் ஒரு சலுகையை ஃபேர்பிரைஸ் குழுமம் அறிவித்தது.

சமூக சுகாதார உதவித் திட்டத்தில் (சாஸ்) இடம்பெற்றுள்ள குறைந்த வருமானக் குடும்பத்தினரின் நீல நிற, ஆரஞ்சு நிற அட்டைகளுக்கு 2025ஆம் ஆண்டின் முதல் 60 நாள்களுக்கு 6 விழுக்காடு விலைக்கழிவு வழங்கப்படும் என்பது அந்தச் சலுகை.

இதற்கிடையே, பிரைம் பேரங்காடி ஓர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஜனவரி 3 முதல் 16 வரை தனது பேரங்காடிக் கிளைகளில் $80 சிடிசி பற்றுச்சீட்டுகளைச் செலவிடுவோருக்கு $5 பற்றுச்சீட்டு திருப்பித் தரப்படும் என்று அது தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்