ஜூரோங் ஈஸ்ட், வெஸ்ட்கேட் மால் விளையாட்டு இடத்தில் தன் குழந்தையைத் தள்ளியதாகக் கூறி ஆறு வயதுச் சிறுவனை ஆடவர் ஒருவர் அறைந்துள்ளார்.
அதனால் மிரண்டுபோன அச்சிறுவன் அதன்பின் மிகவும் நிலை தடுமாறிப்போனான்.
டிசம்பர் 22ஆம் தேதி யூலேண்ட் உள் விளையாட்டு இடத்தில் நடந்த அச்சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை திரு அலொய் சுவா ஸ்டோம்பிடம் விவரித்தார்.
“மற்றச் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த என் மகன் சிறு சண்டையில் ஈடுபட்டுள்ளான். சிறுவர்களுக்கிடையே ஏற்படும் சாதாரண சண்டை. அப்போது அவன் ஒரு பிள்ளையைத் தள்ளிவிட்டுள்ளான். அந்தப் பிள்ளையின் தந்தை சிறிதும் யோசிக்காமல் என் மகனின் முகத்தில் அறைந்தார்.
“அது அவனை உணர்வு ரீதியாகவும் பாதித்துள்ளது. அவன் உடல் நடுங்கியது. அவனது சிறு முகத்தில் தடம் பதிந்து, சிவந்திருந்தது. கண்ணீர் வழிந்தது. என் மனைவி, அந்த ஆடவரைக் கேட்டபோது தாம் அறையவில்லை என மறுத்தார். ஆனால் சிசிடிவி கேமராவில் அது பதிவாகியுள்ளது,” என்றார் அவர்.
சிறுவனை அறைந்த 38 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூறியது என்று ஸ்டோம்ப் குறிப்பிட்டது. அன்று பிற்பகல் 2.40 மணிக்கு உதவிகேட்டு அழைப்பு வந்ததாகவும், நினைவுடன் இருந்த சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.
14 வயதுக்குக் குறைந்தவருக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டார். விசாரணை தொடர்கிறது.
“முகத்தில் ஏற்பட்ட காயம் ஆறிவிட்டாலும் அவன் மனநிலைப் பாதிப்பு இன்னும் சரியாகவில்லை. துடிப்பான என் மகன் எதிலும் ஈடுபடாமல் இருக்கிறான். தூக்கத்தில் எழுந்து பயத்தில் அழுகிறான்,” என்று தந்தை வருந்தினார்.

