தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விண்வெளித் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு மேலும் $60 மில்லியன் ஒதுக்கீடு

2 mins read
மொத்தம் $200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது
93fa8320-a006-409b-b2a8-1da0a9492b7d
துணைப் பிரதமர் கான் கிம் யோங், பிப்ரவரி 26ஆம் தேதி சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற 17வது உலகளாவிய விண்வெளி, தொழில்நுட்பக் கருத்தரங்கில் உரையாற்றினார். - படம்: சாவ்பாவ்

விண்வெளித் தொழில்நுட்பத் துறை மற்றும் அதன் ஆய்வுக் கட்டமைப்பை மேம்படுத்த, சிங்கப்பூர் மேலும் 60 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

அடுத்த ஈராண்டுகளில் விண்வெளித் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்திற்கு (STDP) அந்தத் தொகை வழங்கப்படும்.

அதனுடன், இந்தத் திட்டத்திற்கு அரசாங்கம் மொத்தம் $200 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையை ஒதுக்கியுள்ளது.

2022ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது இதில் 150 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்பட்டது.

புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் நிதி, விண்வெளித் தொழில்நுட்பத்தில் புத்தாக்கத்தை விரைவுபடுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் உயர்கல்வி நிலையங்களிலும் ஆய்வுக் கழகங்களிலும் விண்வெளித் தொழில்நுட்பக் கூடங்களை அமைக்கவும் அது தொடர்பான ஆய்வை வர்த்தகமயமாக்கவும் அந்த நிதி உதவும்.

சிங்கப்பூரில் இதுவரை ‘எஸ்டிடிபி’ திட்டத்தின் ஆதரவுடன் விண்வெளி தொடர்பான 14 காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறினார்.

சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 26) நடைபெற்ற 17வது உலகளாவிய விண்வெளி, தொழில்நுட்பக் கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

விண்வெளி அடிப்படையிலான தொடர்புகளால் கடலில் கப்பல்கள் இருக்குமிடம் குறித்த நிகழ்நேரத் தகவல்களைப் பெற முடியும் என்று திரு கான் கூறினார்.

துறைமுகச் செயல்பாட்டை மேம்படுத்த இது உதவும் என்றார் அவர்.

கூடுதல் நிதி விண்வெளித் தொழில்நுட்பத்தில் புத்தாக்கத்தை விரைவுபடுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் நிதி விண்வெளித் தொழில்நுட்பத்தில் புத்தாக்கத்தை விரைவுபடுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: சாவ்பாவ்

மேலும், விண்வெளி சார்ந்த அதிவிரைவுக் குரல் தொடர்புகள், விமானிகளுக்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் உள்ளடங்கிய வட்டாரங்கள் குறித்த விரிவான தகவல்களை வழங்கும் என்பதைத் திரு கான் சுட்டினார்.

விமானப் போக்குவரத்து நிர்வாகச் செயல்திறனையும் பாதுகாப்பையும் மேம்படுத்த இது உதவும் என்றார் அவர்.

சிங்கப்பூரில் 70 விண்வெளி நிறுவனங்கள் உள்ளன என்றும் அவற்றில் செயற்கைக்கோள் சேவை வழங்கும் உலகின் தலைசிறந்த 10 நிறுவனங்களின் வட்டாரத் தலைமையகங்களும் அடங்கும் என்றும் திரு கான் கூறினார்.

உலகளாவிய நிலையில் விண்வெளிப் பொருளியல் விரிவடையும் வேளையில் 2035ஆம் ஆண்டுக்குள் அது மும்மடங்காகி 1.8 டிரில்லியன் அமெரிக்க டாலரை (S$2.4 டிரில்லியன்) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்