தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசாங்கச் சேவை உபகாரச் சம்பளத்தை 60 பேர் பெறுகின்றனர்

3 mins read
b0e48893-8538-4a58-82f7-23e0410b2ec7
பொதுச் சேவை ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங்கிடமிருந்து அரசாங்கச் சேவை ஆணையத்துக்கான உபகாரச் சம்பளத்தைப் பெறும் தேசியச் சுவர்ப்பந்து வீராங்கனை ஸ்வேதா சிவகுமார், 18. - படம்: சாவ்பாவ்

தேசியச் சுவர்ப்பந்து (ஸ்குவா‌ஷ்) வீரர் ஸ்வேதா சிவகுமார், 18, சிங்கப்பூரை விளையாட்டில் பிரதிநிதிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், நாட்டிற்குச் சேவையாற்றவும் விரும்புகிறார்.

அவருக்கு அந்த வாய்ப்பளித்துள்ளது, அரசாங்கச் சேவை ஆணையத்தின் (பிஎஸ்சி) உபகாரச் சம்பளம். இந்த ஆண்டு அதைப் பெற்ற 60 பேரில் ஸ்வேதாவும் ஒருவர்.

அதன்வழி அவர் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் கணினி அறிவியலில் பட்டப்படிப்பு மேற்கொள்வார்.

ஆண்டுதோறும் இந்த உபகாரச் சம்பளம் 1,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெறுகிறது. கல்வியில் சிறந்த தேர்ச்சியைத் தாண்டி, பொதுச் சேவைக்கான மனம், நேர்மை, அர்ப்பணிப்பு ஆகிய பண்புகளையும் கொண்டுள்ளவர்களுக்கே உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது.

உபகாரச் சம்பளம் பெறுவோர் தங்கள் படிப்பை முடித்தபின் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் வரை அரசாங்கச் சேவையில் பணியாற்ற வேண்டும்.

இந்த ஆண்டு உபகாரச் சம்பளத்தைப் பெறும் 60 பேரில் 52 பேர் (87%) வெளிநாட்டுக்குச் செல்லவுள்ளனர். அண்மைய காலத்தில் இந்தப் புள்ளிவிவரம் ஆக அதிகம். 28 பேர் இங்கிலாந்துக்கும் 19 பேர் அமெரிக்காவுக்கும் செல்லவுள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, ஹாங்காங் ஆகியவற்றுக்கு ஐவர் செல்லவுள்ளனர்.

முதன்முறையாக, மறுவடிவமைக்கப்பட்ட பிஎஸ்சி (பொது நிதி) உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. வர்த்தகம், பொருளியல் போன்ற துறைகளுக்கும் இந்த உபகாரச் சம்பளம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உபகாரச் சம்பள விருதளிப்பு விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 25) ‘இன்டர்கான்டினென்டல்’ ஹோட்டலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வருகையளித்தார் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் தற்காப்பு அமைச்சருமான சான் சுன் சிங்.

சிங்கப்பூரை எஸ்ஜி100க்கு வழிநடத்திச் செல்வது உபகாரச் சம்பளம் பெறும் ஒவ்வொருவரின் கடமையாகும் என வலியுறுத்தினார் அமைச்சர் சான்.

“சிங்கப்பூர் இன்னும் ஓர் இளம் நாடு. இன்று உபகாரச் சம்பளம் பெறும் சிலர் இங்குப் பிறந்தவர்களல்லர். சிங்கப்பூர் வெற்றிகரமாகச் செயல்படும்போது சிங்கப்பூரைத் தேர்ந்தெடுப்பது எளிது. ஆனால், ஒரு சிங்கப்பூரருக்கான உண்மையான சவால், சிங்கப்பூர் முன்பு இருந்த அளவுக்கு வெற்றிகரமானதாக இல்லாவிட்டாலும் நீங்கள் சிங்கப்பூரைத் தேர்ந்தெடுக்கிறீர்களா என்பதே.

“நீங்கள் நாளைய சவால்களைப் பற்றி முன்கூட்டியே சிந்தித்து, அவற்றை எதிர்கொள்ள நாளைய தீர்வுகளை வழங்க வேண்டும்,” என்றார் அவர்.

37 ஆண்டுகளுக்கு முன் தான் இச்சம்பளத்தைப் பெற்ற அனுபவத்தையும் பகிர்ந்தார் அமைச்சர் சான்.

விளையாட்டைத் தாண்டிய சமூக நாட்டம்

“என் தந்தை என்னிடம் தத்துவம் பற்றி நிறைய பேசுவார். “நான் என்றால் என்ன?” போன்ற கேள்விகளை என்னிடம் கேட்பார். இது போன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லாவிட்டாலும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன,” என்றார் ஸ்வேதா.

தம் சுவர்ப்பந்துப் பயிற்சிகள், போட்டிகளுக்கிடையே படிப்பில் பின்தங்காமல் இருக்க நண்பர்கள் உதவினர்.

இதனால் சமூகத்துக்குப் பங்காற்றும் ஆர்வமும், ‘நம் நாட்டுக்கு எது சரியான பாதை?’ போன்ற பெரிய கேள்விகளுக்கு விடைகாணும் ஆற்றலும் அவரிடத்தில் பிறந்தன.

அரசாங்கச் சேவை ஆணையத்தின் உபகாரச் சம்பளம் மூலம் தன்னால் தொழில்நுட்ப ரீதியாக மட்டுமின்றி கொள்கை உருவாக்கத்திலும் நாட்டிற்குப் பங்காற்ற முடியும் என எதிர்பார்க்கிறார் ஸ்வேதா.

‘லயன்ஸ் பிஃப்ரெண்டர்ஸ்’ அமைப்புமூலம் வாராவாரம் முதியோரைச் சந்தித்துத் தனிமையைப் போக்கினார் ஸ்வேதா. மியன்மார் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் பேச இணையம்வழி கற்பித்தார்.

பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலுடன் தத்துவமும் பயில அவருக்கு வாய்ப்பு உள்ளது.

அக்காவழித் தங்கை

ஸ்வேதாவைவிட ஐந்து வயது மூத்தவரான அக்கா ஸ்நேஹா சிவகுமார் முன்பு சிங்கப்பூரின் தேசிய சுவர்ப்பந்து வீரர். இப்போது அவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார்.

அக்காவை முன்னுதாரணமாகக் கொண்டு, தொடக்கப்பள்ளிப் பருவம் முதல் சுவர்ப்பந்து விளையாடிவந்துள்ளார் ஸ்வேதா.

11 வயதிலேயே தேசிய ஜூனியர் சுவர்ப்பந்து அணியில் சேர்ந்தார் ஸ்வேதா. மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி, ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளி சுவர்ப்பந்து அணிகளில் வெற்றியைச் சுவைத்தது மட்டுமன்றி, தேசிய அளவிலும் வெற்றிகளைப் பெற்றுள்ளார் ஸ்வேதா.

2023ல் போர்னியோவில் நடந்த ஆசிய ஜூனியர் போட்டிகளில் வெண்கலத்தையும் அதே ஆண்டு தாய்லாந்தில் நடந்த தென்கிழக்காசிய ஜூனியர் போட்டிகளில் வெள்ளியையும் அவர் கைப்பற்றினார்.

தென்கிழக்காசிய ஜூனியர் போட்டிகளில் பதக்கம் வென்ற ஸ்வேதா.
தென்கிழக்காசிய ஜூனியர் போட்டிகளில் பதக்கம் வென்ற ஸ்வேதா. - படம்: ஸ்வேதா சிவகுமார்
தேசியச் சுவர்ப்பந்து விளையாட்டாளர் ஸ்வேதா.
தேசியச் சுவர்ப்பந்து விளையாட்டாளர் ஸ்வேதா. - படம்: ஸ்வேதா சிவகுமார்

பெரியவர் பிரிவில் முதன்முறையாக, ஜூன் 2024ல் ஃபிலிப்பின்சில் நடந்த தென்கிழக்காசிய கோப்பையில் அவர் பங்கேற்றார். முதன்முறையாக ‘டபிள்ஸ்’ விளையாடினார்.

யேல் பல்கலைக்கழகத்தின் சுவர்ப்பந்து அணியிலும் அவர் விளையாடவுள்ளார். “அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் நான் சந்தித்துள்ள விளையாட்டாளர்களும் அங்கு என்னுடன் அணியில் இருப்பார்கள். அவர்களுடன் பயிற்சிசெய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்