ரிவர் வேலி தொடக்கப் பள்ளி மாணவர்கள் 60 பேர் இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளியின் மையச் சமையற்கூட நடத்துநரால் ஜனவரி 14ஆம் தேதி வழங்கப்பட்ட நண்பகல் உணவை உண்டபின் அவர்களுக்கு நச்சுணவு பாதிப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதற்கு மறுநாள் அவர்களிடம் இரைப்பை குடல் அழற்சிக்கான அறிகுறிகள் தெரிந்ததாகக் கூறப்பட்டது.
அவர்களில் நால்வரைத் தவிர மற்ற அனைவரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) பள்ளிக்குத் திரும்பியதாகக் கல்வி அமைச்சு, சிங்கப்பூர் உணவு அமைப்பு, தொற்றுநோய்கள் அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
அவர்களில் எவரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்றும் அவ்வறிக்கை கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
பாதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நலத்தைப் பள்ளி கண்காணித்து வருகிறது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் பாதிப்பிற்கான காரணத்தைக் கண்டறியவும் சிங்கப்பூர் உணவு அமைப்புடனும் தொற்றுநோய்கள் அமைப்புடனும் பள்ளி இணைந்து செயலாற்றி வருகிறது.
உணவகத்திலும் இதர வளாகங்களிலும் தூய்மைப் பணிகளை அது முடுக்கிவிட்டுள்ளது.
இதனையடுத்து, உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதன் முக்கியத்துவம் குறித்தும் உணவைக் கையாள்வது தொடர்பான சிங்கப்பூர் உணவு அமைப்பின் விதிமுறைகளுக்கு இணங்கி நடப்பது குறித்தும் உணவக நடத்துநரான கோர்மெட்ஸ் நிறுவனத்திற்குக் கல்வி அமைச்சு நினைவூட்டியுள்ளது. அந்நிறுவனமே அப்பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து உணவு வழங்கும்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, ஜனவரி 15ஆம் தேதி நச்சுணவால் மாணவர்களுக்கு ஏற்பட்ட வயிற்றுக்கோளாறு குறித்து அறிந்துள்ளதாக கோர்மெட்ஸ் கூறியது. அதற்கு முதல்நாள் வழங்கப்பட்ட பீட்சா தொடர்பிலான கருத்துகளையும் அது கேட்டறிந்தது.
“அந்தக் கருத்துகளை மிகவும் கவனமாகக் கருதுகிறோம். நிலைமையை மறுஆய்வு செய்யவும் உண்மையைக் கண்டறியவும் பள்ளித் தலைமைத்துவடனும் சிங்கப்பூர் உணவு அமைப்புடனும் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறோம்,” என்று கோர்மெட்ஸ் பேச்சாளர் கூறினார்.

