புத்ராஜெயா: சிங்கப்பூர் அரசாங்கம், மலேசியாவில் இரண்டு இடங்களில் புதிய தூதரக அலுவலகங்களைத் திறக்கவிருக்கிறது.
சாபாவிலும் சரவாக்கிலும் துணைத் தூதரகங்கள் அமையும்.
கிழக்கு மலேசியாவுடன் பொருளியல் தொடர்பை ஆழமாக்கவும் இரு நாட்டு மக்களிடையே உறவை வலுப்படுத்தவும் சிங்கப்பூர் இந்தப் புதிய துணைத் தூதரகங்களை அமைக்கிறது.
சில மலேசிய பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க சிங்கப்பூரைச் சேர்ந்த தொண்டூழியர்களுக்கு உதவும் வகையில் மலேசியாவும் சிங்கப்பூரும் ஒரு புதிய திட்டத்தையும் தொடங்குகின்றன.
மலேசியா-சிங்கப்பூர் தொண்டூழியர்கள் திட்டம் என்று அழைக்கப்படும் அந்தத் திட்டம் 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், இது போன்ற பிற முயற்சிகளையும் கூட்டு அறிக்கையில் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் பகிர்ந்துகொண்டனர்.
சென்ற செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) அன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற 11வது சிங்கப்பூர், மலேசியத் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பின்போது கூட்டறிக்கை வெளியிடப்பட்டன.
அந்த சமயத்தில் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கான ஒப்பந்தமும் இரு தரப்பிலும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
உயர்கல்வி, சமூக நலத்திட்டம், நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் சேர்ந்து செயல்பட தலைவர்கள் உறுதி கூறியுள்ளனர்.
இரு தலைவர்களும் நிலுவையில் உள்ள பிரச்சினைகளை ‘ஓர் இணக்கமான, ஆக்கபூர்வமான அணுகுமுறை’ மூலம் தீர்க்க இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த சிக்கல்களில் வான்வெளி, நீர் மற்றும் கடல் எல்லைகளை வரையறுத்தல் உள்ளிட்டவை அடங்கும்.
சிங்கப்பூர், மலேசிய அரசதந்திர உறவு ஏற்பட்டு அறுபது ஆண்டுகள் ஆகின்றன. அதனைக் குறிக்கும் வகையில் பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு நாடுகளும் முனைகின்றன.

