60 ஆண்டு அரசதந்திர உறவு: சிங்கப்பூர்-அமெரிக்கா பங்காளித்துவம் மறுவுறுதி

1 mins read
10db8ab2-cfda-4692-8447-027e3889b460
2025 அக்டோபர் 29ஆம் தேதி, தென்கொரியாவின் ஜியோங்ஜு நகரில் நடந்த ஏபெக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் கைகுலுக்கும் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ஸ் டைம்ஸ்

பிரதமர் லாரன்ஸ் வோங்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) தொலைபேசியில் உரையாடினர். 2026ல் சிங்கப்பூர்-அமெரிக்கா 60 ஆண்டுகால அரசதந்திர உறவுகளைக் குறிக்கும் விதமாக இரு நாடுகளின் பங்காளித்துவ உறவுமுறையை இரு தலைவர்களும் மறுவுறுதிப்படுத்தினர்.

சிங்கப்பூர், அமெரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் பங்காளித்துவத்தின் நீடித்த பலத்தை இருவரும் மறுவுறுதிப்படுத்தியதாக வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

ஏற்கெனவே உள்ள அம்சங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் புதியவற்றில் அதை விரிவுபடுத்துவதையும் பிரதமர் வோங்கும் திரு டிரம்ப்பும் எதிர்பார்ப்பதாக அமைச்சு கூறியது.

2026 டிசம்பரில் ஃபுளோரிடா மாநிலம், மயாமியில் அமெரிக்கா ஏற்று நடத்தவுள்ள ஜி20 உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூருக்கு அழைப்பு விடுத்ததற்காக திரு டிரம்ப்புக்கு பிரதமர் வோங் நன்றி தெரிவித்தார்.

“அமெரிக்காவின் ஜி20 கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள அம்சங்கள் தொடர்பில் பங்களிக்கவும் அனைத்துக்குமான பொருளியல் வளர்ச்சியை மேம்படுத்தவும் சிங்கப்பூர் எதிர்பார்க்கிறது,” என்று அமைச்சு சொன்னது.

ஜி20 கூட்டமைப்பில் 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் ஆப்பிரிக்க ஒன்றியமும் அங்கம் வகிக்கின்றன. இவை சுழற்சி முறையில் ஜி20 கூட்டத்தை ஏற்று நடத்துகின்றன. 2025ல் தென்னாப்பிரிக்கா இதற்குத் தலைமை தாங்கியது.

குறிப்புச் சொற்கள்