கோலாலம்பூர்: சிங்கப்பூர் குடியுரிமை பெற மலேசியக் குடியுரிமையை துறப்போரின் எண்ணிக்கை அண்மை ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 6,000க்கும் அதிகமானோர் அவ்வாறு செய்திருக்கின்றனர். கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி 6,060 மலேசியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டில் 7,394 பேர் மலேசியக் குடியுரிமையைத் துறந்ததாகவும் அதற்கு அடுத்த மூன்றாண்டுகளில் அந்த எண்ணிக்கை 8,654, 7,583, 7,665 எனப் பதிவானது என்றும் கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு திரு சைஃபுதீன் எழுத்து மூலமாக அளித்த பதிலில் விளக்கி உள்ளார்.
சென்ற ஆண்டு அந்த எண்ணிக்கை 16,930ஆகப் பதிவானது. அது, 2023ல் பதிவான 11,500ஐவிட அதிகமாகும். இதற்கு முன்பு அந்த எண்ணிக்கை ஆக அதிகமாக 2019ல் பதிவானது. அந்த ஆண்டு 13,362ஆகப் பதிவான எண்ணிககை கொவிட்-19 நோய்ப் பரவல் காலமான 2020ல் 5,591க்குக் குறைந்தது என்று மலாய் மெயில் கூறியது.