நிதி நெருக்கடியில் தவித்த மீன் பண்ணை நிபந்தனை அடிப்படையில் விற்பனை

2 mins read
71b74740-d131-4e2a-86f5-a9237d31f5e0
மீன் பண்ணையைக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) அனுமதி அளிக்க வேண்டும்.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லிம் சூ காங்கில் உள்ள எட்டு மாடி மீன் பண்ணையை நிபந்தனைகளின் அடிப்படையில் வாங்க இரு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டு உள்ளன.

‘அப்போலோ அக்குவாகல்சர்’ குழுமத்தின் துணை நிறுவனமான ‘அப்போலோ அக்குவாரியம்’ நடத்தி வந்த அந்த மீன் பண்ணை $65 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டது.

ஈராண்டுகளுக்கும் மேலாக அது நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்த நிலையில் தற்போது ஒருவழியாக இரண்டு நிறுவனங்கள் அதனை வாங்க முன்வந்துள்ளன.

உள்ளூர் கட்டுமான, பொறியியல் நிறுவனமான ‘எச்பிசி பில்டர்ஸ்’, மீன் பண்ணைத் துறையில் கிளைகளை நடத்தி வரும் முதலீட்டு நிறுவனமான ‘அக்குவாசாம்ப்’ ஆகியன அந்த நிறுவனங்கள்.

இருப்பினும், அந்த மீன் பண்ணையைக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) அனுமதி அளிக்க வேண்டும்.

அது குறித்து அந்த அமைப்பை ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தொடர்புகொண்டு கேட்டபோது பதிலளிக்க அது மறுத்துவிட்டது.

சிங்கப்பூரின் ஆக உயரமான மீன் பண்ணைகளில் ஒன்றான அப்போலோ மீன் பண்ணை கடந்த 2021ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது.

சிங்கப்பூரின் நிலச் சிக்கனத்திற்கு உதவும் வகையில் மீன் பண்ணையின் பல்வேறு பணிகளை அந்நிறுவனம் உயர்மாடிகளில் உள்ளடக்கியது.

இருப்பினும், அதனை நடத்தும் தலைமை நிறுவனமான அப்போலோ அக்குவாகல்சர் குழுமம் நிதி நெருக்கடியில் சிக்கிய பின்னர் அந்த மீன் பண்ணை முடங்கியது.

2022 மே மாதம் முதல் அது நீதிமுறை நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதியில் மீன் பண்ணையின் செயல்பாடுகளை அப்போலோ அக்குவாரியம் முழுமையாக நிறுத்தியது.

நிதி நெருக்கடியில் உள்ள நிறுவனங்கள் கலைந்துபோவதைத் தடுக்கும் நோக்கில் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதே நீதிமுறை நிர்வாகம்.

அந்த நிர்வாகத்தின்கீழ், பாதிக்கப்பட்ட நிறுவனத்தின் கடன் விவகாரங்கள், வர்த்தகம் மற்றும் சொத்துகளை நிர்வகிக்க சுயேச்சையான நீதிமுறை மேலாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

சிங்கப்பூர் நிறுவனமான அப்போலோ அக்குவாகல்சர் குழுமத்திற்கு ஐந்து துணை நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் அப்போலோ அக்குவாரியம் மட்டுமே இயங்குகிறது.

இதர நான்கு நிறுவனங்களும் கலைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன.

குறிப்புச் சொற்கள்