துவாஸ் பகுதியில் திங்கட்கிழமை (பிப்ரவரி 24) நடந்த விபத்தில் சிக்கிய 65 வயது சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
விபத்து நடந்த இடத்தில் பல காவல்துறை வாகனங்களும், நீலநிறக் கூடாரமும், விபத்தில் சிக்கி நசுங்கிய சைக்கிளும் காணப்பட்டதாக ஆக்சிடென்ட் டாட் காம் அதன் ஃபேஸ்புக் தளத்தில் அந்த விபத்து குறித்த காணொளியை வெளியிட்டிருந்தது.
துவாஸ் அவென்யூ 1 - துவாஸ் அவென்யூ 8 சந்திப்பில் விபத்து நடந்ததாக சம்பவ நாளன்று காலை 11 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
விபத்தில் சிக்கிய 65 வயது சைக்கிளோட்டியைப் பரிசோதித்த மருத்துவ உதவியாளர், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தார்.
கவனமின்றி வாகனம் ஓட்டி, உயிரிழப்பிற்குக் காரணமாக இருந்ததாகக் கூறி, 43 வயது கனரக வாகன ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
போக்குவரத்துக் காவல்துறை பிப்ரவரி முற்பகுதியில் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2024 ஆம் ஆண்டில் அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளில் இல்லாத அளவு விபத்துகளால் உயிரிழப்பு மற்றும் காயமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும், சாலை விபத்தில் 142 பேர் உயிரிழந்துவிட்டனர். அது அதற்கு முந்தைய ஆண்டில் 136ஆக இருந்தது. அதேபோல் விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 8,941ஆக இருந்து 2024ஆம் ஆண்டில் 9,302ஆக அதிகரித்துள்ளது.