சிங்கப்பூரின் 59வது பிறந்தநாளை முன்னிட்டு, 67,000க்கும் மேற்பட்ட உள்ளூர் மாணவர்கள் தங்கள் குடும்பத்திலுள்ள முதியவர்களை நேர்காணல் செய்து, அவர்களின் கதைகளையும் நாட்டிற்கு அவர்களது வாழ்த்துகளையும் கலைப் படைப்புகள், கட்டுரைகளின்வழி பதிவு செய்துள்ளனர்.
2019ல் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை, ‘அவர் ஹார்ட் ஃபார் சிங்கப்பூர்’ கற்றல் கலை காட்சிக்கூடத்தால் (Our Heart for Singapore learning gallery) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரின் அனைத்து பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, சிறப்புக் கல்வி நிலையங்களைச் சேர்ந்த 67,140 இளையர்கள் தங்களுடைய தாத்தா, பாட்டிகளுடன் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
மாணவர்கள் தங்கள் தாத்தா, பாட்டியுடன் தொடர்புகொள்வதன்மூலம் அவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கும் தங்களின் குடும்பத்துடனும் சமூகத்துடனும் நெருங்கிய பிணைப்பை உருவாக்குவதற்கும் அதன்மூலம் சிங்கப்பூரர் என்ற உணர்வை வளர்ப்பதற்கும் இந்த நடவடிக்கை வழிவகுக்கிறது.
ஏற்பாட்டாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் 540 மாணவர்களின் படைப்புகள் ஆண்டிறுதியில் பொதுமக்களின் பார்வைக்கு நகரும் கண்காட்சி ஒன்றில் இடம்பெறவுள்ளன.
பாடாங்கில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) மாலை 4 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர்களுக்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் 180 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டதோடு, 15 மாணவர்கள் தங்கள் படைப்புகளை அறிமுகப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கல்வி, நிதி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“இந்த நிகழ்ச்சி பேரக்குழந்தைகளுக்கும் அவர்களின் தாத்தா, பாட்டிகளுக்கும் இடையே முக்கியக் கலந்துரையாடலைத் தூண்டுகிறது. இதன்வழி, ஒரு குடும்பத்தின் மூத்த தலைமுறையினர் இளம் தலைமுறையினரிடம் தங்களது பாரம்பரியம், மரபுகள், கலாசாரம் முதலியவற்றைக் கொண்டுசேர்க்க முடிகிறது,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மேரிமவுண்ட் கான்வெண்ட் பள்ளியில் தொடக்கநிலை ஐந்தில் பயிலும் ர.தியா, 11, தம்முடைய தாத்தா கம்பத்தில் பிறந்து வாழ்ந்த அனுபவங்களைப் பற்றி விவரித்து கட்டுரை எழுதியிருந்தார்.
“கம்பத்தில் நிறைய வசதிகள் இல்லை என்று என் தாத்தா சொன்னார். இருப்பினும், எல்லாரும் ஒற்றுமையாக இருந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பல இன நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகக் கூறினார்.
“இதைக் கேட்டபோது, கொவிட்-19 பெருந்தொற்றுதான் என் நினைவுக்கு வந்தது. ஏனென்றால், அப்போது நாம் ஏராளமான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டோம். நமது ஒற்றுமை, விடாமுயற்சி, நல்லிணக்கம், மீள்திறனே இதற்குக் காரணம். இந்தப் பண்புகளைத் தொடர்ந்து கட்டிக்காத்தால் நாம் எந்தச் சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம். சிங்கப்பூரும் தொடர்ந்து செழிப்படையும்,” என்றார் தியா.
நிகழ்ச்சிக்கு தியாவுடன் வந்திருந்த அவருடைய தாத்தா திரு கோதண்டராமராஜு, 71, சிங்கப்பூர் மென்மேலும் வளர தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் உயர்நிலை மூன்று மாணவியான லேக்ஷத்ரா குமரேசன், 15, தனது பாட்டிக்குப் பிடித்த பண்டிகையான தீபாவளியைப் பற்றி கட்டுரை எழுதியிருந்தார்.
“தீபாவளியன்று குடும்பமும் நண்பர்களும் ஓர் இடத்தில் ஒன்றிணைந்து பேசிப் பழகி, புதிய நினைவுகளை உருவாக்குவதைப் பார்க்கும்போது என் பாட்டிக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று சொன்னார். இந்தியக் கலாசார உணவு வகைகளைச் சமைத்து, அண்டை வீட்டாருடன் அவற்றைப் பகிர்வதையும் அவர் விரும்புவார்,” என்றார் லேக்ஷத்ரா.
அவருடைய தாயார் திருமதி கங்காதேவி, இதுபோன்ற நடவடிக்கைகள் மாணவர்கள் அவர்களின் திறன்களைப் பயன்படுத்துவற்கும் அவர்களின் தாத்தா, பாட்டியின் கடந்தகால நினைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் ஒரு நல்ல வாய்ப்பை அளிப்பதாகக் கூறினார்.