சென்ற ஆண்டு (2024) சாதனை அளவாக, சிங்கப்பூரர்கள் 691,100 பேர் ஜப்பானுக்குச் சென்றதாக ஜப்பானிய தேசியச் சுற்றுப்பயண அமைப்பின் (JNTO) சிங்கப்பூர் அலுவலகம் ஜனவரி 15ஆம் தேதி தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 16.9 விழுக்காடு அதிகம். 2023ல் 591,300 பேர் சிங்கப்பூரிலிருந்து ஜப்பானுக்குச் சென்றிருந்தனர். அப்போது அந்த எண்ணிக்கை சாதனை அளவாகக் கூறப்பட்டது.
வருகையாளர் எண்ணிக்கை அதிகரித்ததற்கு, ஜப்பானிய யென்னுக்கு நிகரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு வலுவாக இருந்ததும் ஒரு காரணம் என்று ‘ஜேஎன்டிஓ’ கூறியது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே புதிய விமானச் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டதும் காரணம் என்று அது சொன்னது.
சென்ற ஆண்டு ஜப்பானுக்குச் சென்ற சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினர் டிசம்பர் மாதத்தில் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு டிசம்பருடன் ஒப்புநோக்க, இது 19.8 விழுக்காடு அதிகம்.
சென்ற ஆண்டு முழுவதும், உலகெங்குமிருந்து 36.8 மில்லியன் பேர் ஜப்பானுக்குச் சென்று திரும்பியுள்ளனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் வரை ஒசாக்காவில் உலகக் கண்காட்சி நடைபெறுவதால் கூடுதலானோர் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2030ஆம் ஆண்டுக்குள் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 60 மில்லியனாக உயர்த்த ஜப்பானிய அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.