வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், புதன்கிழமை (ஜூன் 17) தேவைக்கேற்பக் கட்டப்படும் (பிடிஓ) 6,952 வீடுகளை விற்பனைக்கு விட்டுள்ளது.
செம்பவாங் நார்த்தில் கட்டப்படும் கிட்டத்தட்ட 2,000 வீடுகளும் அவற்றுள் அடங்கும். அந்த வீடுகளுக்காகக் காத்திருக்கும் நேரம் மூன்று ஆண்டுகளுக்குக் குறைவாக இருக்கும்.
மொத்தம் ஏழு ‘பிடிஓ’ திட்டங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அங் மோ கியோ, பீஷான், புக்கிட் மேரா, உட்லண்ட்ஸ், செம்பவாங் ஆகிய வட்டாரங்களில் அவை அமைந்திருக்கும்.
அண்மை அறிவிப்பில் இரண்டு முதன்மை ‘பிடிஓ’ திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று புக்கிட் மேராவில் கட்டப்பட்டுவரும் ‘பெர்லாயர் ரைஸ்’ திட்டம். மற்றொன்று, பீஷானில் அப்பர் தாம்சன் வட்டாரத்தில் உருவாகும் ‘லேக்வீவ் கஸ்கேடியா’ திட்டம். கழகம், மானியத்தைத் திரும்பப்பெறும் விகிதம், புக்கிட் மேரா திட்டத்திற்கு 14 விழுக்காடாகவும் பீஷான் திட்டத்திற்கு 10 விழுக்காடாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அங் மோ கியோவில் வரவிருக்கும் கெபுன் பாரு பிரீஸ், கெபுன் பாரு ரிட்ஜ் எனும் இரண்டு ‘பிளஸ்’ திட்டங்களுக்கும் அந்த விகிதம் எட்டு விழுக்காடாக இருக்கும்.
எஞ்சிய மூன்று திட்டங்கள், ‘ஸ்டாண்டர்டு’ வகைப்பாட்டின்கீழ் வருகின்றன. உட்லண்ட்சில் வரவுள்ள செம்பவாங் புரூக், செம்பவாங் போர்ட்டிக்கோ, உட்குரூவ் ஏக்கர்ஸ் ஆகியவையே அவை. இந்தத் திட்டங்களின்கீழ் உள்ள வீடுகளுக்கு மானிய மீட்பு விதிமுறை எதுவும் இல்லை. இருப்பினும் இவற்றுக்கு ஐந்தாண்டு குறைந்தபட்சக் குடியிருப்புக் கால விதிமுறை உண்டு.
பெர்லாயர் ரைஸ் திட்டத்தில் மொத்தம் 1,976 வீடுகள். தெலுக் பிளாங்கா ரோட்டில் தெலுக் பிளாங்கா எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே அது அமைந்துள்ளது. அதில் ஈரறை ஃபிளெக்சி, மூவறை, நாலறை வீடுகள் கட்டப்படும். அந்த வீடுகளை வாங்குவோர் நான்கு முதல் நாலறை ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
மானியத்தைச் சேர்க்காமல் அங்கு வீடுகளின் விலைகள் பின்வருமாறு:
தொடர்புடைய செய்திகள்
ஈரறை ஃபிளெக்சி வீடுகளின் விலை: $247,000 - $406,000
மூவறை வீடுகள்: $435,000 - $591,000
நாலறை வீடுகள்: $592,000 - $810,000.
மற்றொரு முதன்மைத் திட்டமான ‘லேக்வீவ் கஸ்கேடியா’வில் ஈரறை ஃபிளெக்சி, நாலறை வீடுகள் என மொத்தம் 1,221 வீடுகள் இருக்கும். மெக்ரிட்சி நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள லேக்வீவ் வட்டாரத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் முதன்முறையாக வரவிருக்கும் பொது வீடமைப்பு வீடுகள் அவை.
திட்டத்திற்கான கட்டுமானத் தளம், அப்பர் தாம்சன் ரோட்டில் லேக்வீவ் குடியிருப்புப் பேட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. அங்கிருந்து மேரிமவுண்ட் எம்ஆர்டி நிலையத்திற்கு ஐந்து நிமிடத்தில் நடந்துசென்றுவிட முடியும். அதில் வரவுள்ள இரண்டு புளோக்குகளில் ஏறக்குறைய 50 வாடகை வீடுகள் இருக்கும். அந்த வீடுகளுக்காகக் கிட்டத்தட்ட நாலேகால் ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
அங் மோ கியோவில் உள்ள இரண்டு பிளஸ் திட்டங்களில் மொத்தம் 1,064 வீடுகள் கட்டப்படும்.
கெபுன் பாரு திட்டத்திற்கு ஏறக்குறைய மூவாண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். சிஎச்ஐஜே செயின்ட் நிக்கலஸ் பெண்கள் பள்ளிக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள இந்தத் திட்டத்தில் மொத்தம் 485 வீடுகள் இருக்கும். அவை மூவறை, நான்கறை வீடுகள்.
கெபுன் பாரு பிரீஸ் திட்டம், அங் மோ கியோ அவென்யூ 1ல் அமைந்துள்ளது. அதில் மொத்தம் 579 ஈரறை ஃபிளெக்சி, நான்கறை வீடுகள் கட்டப்படவிருக்கின்றன. திட்டம், மேரிஃபிளவர் உயர்நிலைப் பள்ளிக்கும் பீஷான்-அங் மோ கியோ பூங்காவுக்கும் அருகில் உருவாகிவருகிறது.
அங்கு வீடு வாங்குவோர், நான்கு ஆண்டுகள், நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
இரண்டு திட்டங்களின் குடியிருப்புகளுக்கும் மேஃபிளவர் எம்ஆர்டி நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 10லிருந்து 15 நிமிடத்திற்குள் நடந்துசென்று விடலாம்.
செம்பவாங்கில் இரண்டு ஸ்டாண்டர்டு திட்டங்களில் மொத்தம் 2,035 வீடுகள் அறிமுகம் காணவிருக்கின்றன. அவை செம்பவாங் டிரைவிலும் சுங்கை செம்பவாங்கிலும் அமைந்திருக்கும். மற்றத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது இரண்டுக்குமே காத்திருப்புக் காலம் குறைவு.
அட்மிரால்டி லேன், செம்பவாங் டிரைவில் கட்டப்படும் செம்பவாங் போர்ட்டிக்கோ திட்டத்தின் வீடுகளுக்காக இரண்டு ஆண்டுகளும் ஏழு மாதங்களும் காத்திருக்க வேண்டியிருக்கும். அதில் மொத்தம் 875 ஈரறை ஃபிளெக்சி, மூவறை, நாலறை வீடுகள் கட்டப்படும்.
மற்றொரு திட்டமான செம்பவாங் புரூக்கில் வீடு வாங்க விரும்புவோர், ஈராண்டுள், ஒன்பது மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். செம்பவாங் போர்ட்டிக்கோவுக்கு எதிர்ப்புறம் அது அமைந்துள்ளது. அதில் மொத்தம் 1,160 ஈரறை ஃபிளெக்சி, மூவறை, நாலறை, ஐந்தறை, மூன்று-தலைமுறை வீடுகள் கட்டப்படும்.
மானியத்தைச் சேர்க்காமல் அங்கு வீடுகளின் விலைகள் பின்வருமாறு:
ஈரறை ஃபிளெக்சி வீடுகளின் விலை: 139,000 - $225,000
மூவறை வீடுகள்: $250,000 - $344,000
நாலறை வீடுகள்: $302,000 to $437,000
ஐந்தறை வீடுகள்: $420,000 to $579,000
செம்பவாங் புரூக்கில் கட்டப்படும் மூன்று-தலைமுறை வீடுகளின் விலை $468,000க்கும் $567,000க்கும் இடைப்பட்டிருக்கும்.
வீடுகளுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 24ஆம் தேதி இரவு மணி 11.59க்கு நிறைவடையும். கழகத்தின் இணையவாசலில் (HDB Flat Portal) அதற்கு விண்ணப்பிக்கலாம்.
அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள அடுத்த பிடிஓ விற்பனையில், பிடோக், கேலாங், செம்பவாங், தெங்கா, தோ பாயோ, ஈசூன் ஆகிய வட்டாரங்களில் ஏறக்குறைய 7,960 வீடுகள் விற்பனைக்கு வரும்.

