தெம்பனிஸ் வட்டாரத்தில் ஏழு கட்டடங்கள் ஒரு பகிர்வுக் குளிரூட்டு அமைப்பை இம்மாதத் தொடக்கத்திலிருந்து பயன்படுத்தி வருகின்றன.
அருகிலுள்ள கூடுதல் கட்டடங்களை இந்தக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தெம்பனிஸ், இந்தப் பகிர்வுக் குளிரூட்டு அமைப்பைப் பயன்படுத்தப்படும் சிங்கப்பூரின் முதல் வட்டாரமாகும்.
வளர்ச்சியடைந்த நிலப் பகுதியில் இந்தப் பகிர்வுக் குளிரூட்டுத் திட்டம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இந்தப் பகிர்வுக் குளிரூட்டு அமைப்பின் மூலம், குளிரூட்டும் வசதியால் சுற்றுக்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு பெரிய அளவில் குறையும். இதன் மூலம், பல்வேறு கட்டடங்களுக்கான குளிரூட்டும் வசதி குறிப்பிட்ட சில கட்டடங்களிலிருந்து வரும்.
இதுபோன்ற பகிர்வுக் குளிரூட்டு அமைப்புகள், கரியமில வாயு வெளியாவதைக் குறைக்கவும் எரிசக்தியைச் சேமிக்கவும் எரிசக்தியைக் கூடுதல் ஆக்ககரமான முறையில் பயன்படுத்தவும் வகைசெய்யும் என்று எஸ்பி குழுமம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தெரிவித்தது. அக்குழுமம்தான் இந்தப் பகிர்வுக் குளிரூட்டு முறையை அமைத்து இயக்குகிறது.
எஸ்பி குழுமத்தின் நீடித்த நிலைத்தன்மைத் தீர்வுப் பிரிவின் நிர்வாக இயக்குநரான எஸ். ஹர்ஷா, “நமது வெப்ப மண்டலப் பருவநிலையில் குளிர்சாதனப் பெட்டியின் முக்கியத்துவத்தை நாம் நன்கு அறிவோம். ஆனால் பொதுவாகக் கட்டடத்துக்குள் அமைக்கப்படும் குளிரூட்டும் அமைப்புகள் சுற்றுச்சூழலுக்குப் போதுமான அளவு உகந்தவையாக இருப்பதில்லை, அவை குறைந்தபட்ச (பயன்பாட்டு) ஆற்றலுடன் உருவாக்கப்படும். குறிப்பாக பழைய கட்டடங்களுக்கு இது பொருந்தும்.
“அத்தகைய கட்டடங்கள், குளிரூட்டப் பெரிய அளவில் எரிசக்தியைப் பயன்படுத்தும். அக்கட்டடங்களில் பல, அதிக காலத்துக்கு இயங்கிக்கொண்டிருக்கும். கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்து மேலும் பசுமையான சிங்கப்பூரை உருவாக்கும் இலக்கைக் கொண்டுள்ள நாம், தற்போதிருக்கும் கட்டடங்களுக்கும் பயன்படக்கூடிய கூடுதல் நீடித்த நிலைத்தன்மை அம்சங்களைக் கொண்டிருக்கும் குளிரூட்டுத் தீர்வுகளைச் செயல்படுத்த வேண்டும்,” என்று விவரித்தார்.
இந்தப் பகிர்வுக் குளிரூட்டு அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் தெம்பனிசில் 1,000 டன் வரை கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும். இந்த அளவு, சாலைகளிலிருந்து 910 கார்களை அகற்றுவதற்குக் சமமாகும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ஆண்டுதோறும் 2.3 மில்லியனுக்கும் அதிகமான கிலோவாட்மணி (kilowatt-hour) அளவு எரிசக்தியை மிச்சப்படுத்த முடியும். இது, 710க்கும் அதிகமான மூவறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளுக்கு ஓராண்டுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கான எரிசக்தி அளவாகும்.

