குற்றச் செயல்களுக்காக சிம் அட்டை வாங்கிய 7 ஆடவர்மீது குற்றச்சாட்டு

குற்றச் செயல்களுக்காக சிம் அட்டை வாங்கிய 7 ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
e1d2253f-64e8-4856-8473-044577d0d814
காவல்துறை அதிகாரிகள் மே 21, 22ஆம் தேதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் சிம் அட்டைகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

சிங்கப்பூரில் குற்ற நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக சிம் அட்டைகளைப் பதிவுசெய்ததாக நம்பப்படும் ஏழு பேர்மீது நீதிமன்றத்தில் சனிக்கிழமை (23) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் 19க்கும் 49க்கும் இடைப்பட்ட வயதுடையோர்.

மே 21, 22ஆம் தேதிகளில் தீவெங்கும் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின்போது அந்த ஏழு பேரும் பிடிபட்டதாகக் காவல்துறை அறிக்கை வெளியிட்டது. பிடிபட்டோரில் ஒருவர் சிங்கப்பூரர்; ஆறு பேர் மலேசியர்கள்.

வெளிநாட்டுக் குற்றக் கும்பல்கள் பயன்படுத்துவதற்குச் சிங்கப்பூரில் சிம் அட்டைகளைப் பதிவுசெய்வோரைக் குறிவைத்து அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிடிபட்ட ஆடவர் எழுவரும் உண்மையான வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பயன்படுத்தி கூடுதல் சிம் அட்டைகளை வாங்கியதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர், அந்த அட்டைகள் பிறரிடம் விநியோகம் செய்யப்பட்டதுடன் ஆள்மாறாட்ட மோசடிகளில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

குற்றச் செயல்களில் பயன்படுத்துவதற்காக சிம் அட்டைகளை வாங்குவோருக்கு அதிகபட்சம் $10,000 அபராதம், மூவாண்டுவரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மோசடிக்காரர்கள், மோசடிக் கும்பல் உறுப்பினர்கள், மோசடிக் கும்பலில் ஆள் சேர்ப்பவர்கள் ஆகியோருக்குக் குறைந்தது ஆறு பிரம்படிகள் விதிக்கப்படும்.

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையமும் சிங்கப்பூர்க் காவல்துறையும் இணைந்து சிம் அட்டைகளை வாங்குவதற்கெனக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ளன.

இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரில் ஒருவர் 10 சிம் அட்டைகள்வரை மட்டுமே வாங்க அனுமதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்