சிங்கப்பூரில், சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக சிம் அட்டைகளை வாங்கியதாக நம்பப்படும் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதுதொடர்பில் மேலும் 65 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
குற்ற நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக சிம் அட்டைகளைப் பதிவுசெய்வோருக்கு எதிராகத் தீவெங்கும் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் அவர்கள் பிடிபட்டனர்.
கடந்த மாதம் 20ஆம் தேதியிலிருந்து வெள்ளிக்கிழமை (மே 8) வரை அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதையடுத்து கைதுசெய்யப்பட்டோரில் ஐவர் ஆண்கள், இருவர் பெண்கள். அவர்கள் 18லிருந்து 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள். அவர்கள், சிம் அட்டைகளை வாங்கி பின்னர் பணத்துக்காக அவற்றை விற்றதாக நம்பப்படுகிறது.
மேலும் 62 ஆண்களிடமும் மூன்று பெண்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
சிம் அட்டைகளை வாங்கித் தருவோரிடம் ஒவ்வொரு சிம் அட்டைக்கும் $10லிருந்து $20 வரை ரொக்கம் வழங்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
வெவ்வேறு கடைகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் சிம் அட்டைகளைப் பதிவுசெய்து வாங்கும்படி சம்பந்தப்பட்டவர்களிடம் கூறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவ்வகையில் அவர்கள் 30லிருந்து 64 சிம் அட்டைகள் வரை வாங்கி குற்றக் கும்பலுக்கு அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
குற்றக் கும்பல்கள் உள்ளூர் சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மோசடிகள், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது போன்ற குற்றச் செயல்களை மேற்கொள்வதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
குற்ற நடவடிக்கைகளில் பயன்படும் என்று தெரிந்தே சிம் அட்டைகளை வாங்கி அடுத்தவர்களிடம் அவற்றைப் பணத்துக்காக விற்போருக்கு $10,000 வரை அபராதம், மூவாண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சிம் அட்டைகளை வாங்கி விற்பனை செய்வோர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று காவல்துறை எச்சரித்தது.

