பொதுக் கழிவறையில் பாலியல் துன்புறுத்தல்; ஆடவருக்கு ஏழு ஆண்டுச் சிறை

1 mins read
df153066-8ec5-4b72-9dbf-37f1279ab9da
காலாங் ரிவர்சைட் பூங்காவில் உள்ள பொதுக் கழிவறை. - படம்: கூகல் வரைபடம்

காலாங் ரிவர்சைட் பூங்காவில் உள்ள கழிவறைக் கூடத்திற்குள் மாது ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய ஆடவருக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

துன்புறுத்தலுக்குப் பிறகு ஏன் அழுகிறாய் என்று பாதிக்கப்பட்டவரிடம் கேட்ட அந்த ஆடவர், அவரை வன்புணர்வு செய்யவில்லை என்று கூறினார். பின்னர், காவல்துறையில் புகார் அளிக்குமாறு சவால் விட்டு அங்கிருந்து வெளியேறினார்.

திங்கட்கிழமை (ஜனவரி 19) பாலியல் துன்புறுத்தல், நீதியின் போக்கிற்கு இடையூறாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை 34 வயதான சொய் ஜிஷெங் ஒப்புக்கொண்டார்.

மாதின் அடையாளத்தைப் பாதுகாக்க அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

காய் ஜிஷெங் என்றும் அழைக்கப்படும் சொய், 2023ஆம் ஆண்டு வேலை நேர்காணலுக்காகத் தமது அலுவலகத்திற்கு வந்திருந்தபோது அந்த மாதைச் சந்தித்தார். அம்மாது சொய்யின் முதலாளி வழங்கிய வேலையை ஏற்கவில்லை.

2024ஆம் ஆண்டு சமூக ஊடகத்தில் அம்மாதுடன் சொய் நட்புக்கொண்டார். தமது குடும்ப வணிகத்துக்கான ஒரு வாடிக்கையாளராக சொய்யைக் கருதியதால் அவருடன் உணவு உண்ண ஒப்புக்கொண்டார்.

2024 ஜனவரி 15ஆம் தேதி அவர்கள் லாவெண்டர் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே இருந்த விரைவு உணவகத்தில் உணவு உண்டனர். பின்னர் அவர்கள் காலாங் ரிவர்சைட் பூங்காவுக்குச் சென்றபோது அம்மாது கழிவறைக்குச் சென்றார். அங்கு சொய் அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார். அப்போது அங்கு எவரும் இல்லை. சொய், 2024 ஜனவரி 19ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்