700 ஆண்டு வளர்ச்சி: புதுவடிவில் வழங்கும் சிங்கப்பூர் வரலாற்றுக் காட்சியகம்

700 ஆண்டு வளர்ச்சி: புதுவடிவில் வழங்கும் சிங்கப்பூர் வரலாற்றுக் காட்சியகம்

1 of 2
படம்: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம்
படம்: கீத் லுடிட்

28 Aug 2026 - 8:51 pm

1 mins read

சிங்கப்பூரின் எழுநூற்றாண்டுக்கும் மேற்பட்ட நீண்ட நெடிய வரலாற்றைப் புதிய வடிவிலும் வண்ணங்களிலும் வழங்க சிங்கப்பூர் வரலாற்றுக் காட்சியகம் அக்டோபர் 10ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் 139ஆம் ஆண்டு நிறைவு நாளான அக்டோபர் 12ஆம் தேதிக்கு இரண்டு நாள்கள் முன்னதாக புத்தம் புதிய ஏற்பாடுகளுடன் காட்சியகம் பொதுமக்களுக்கு அதன் வாயிற் கதவுகளை மீண்டும் திறந்து வரவேற்கவிருக்கிறது.

சிங்கப்பூரின் அன்று முதல் இன்று வரையிலான வரலாற்றை நேரில் கண்டவர்களின் அனுபவங்களை வெளிப்படுத்தும் விதமாக காட்சியகம் அமையும்.

பல தலைமுறைகளைச் சார்ந்தோரின் கதைகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வரலாற்றுக் காப்பாளர்கள் ஆகியோரின் பார்வையில் 14ஆம் நூற்றாண்டில் இங்கிருந்த வாழ்க்கை நிலையிலிருந்து இந்நாள்வரையிலான அனைத்துவித கருத்துகளும் குறிப்புகளும் காட்சியகத்தில் பகிரப்படும்.

இதற்குமுன் காணப்படாத வகையில் பல புதிய பரிமாணங்களில் வரலாற்று நிகழ்வுகள் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும்.

பலரின் தனிப்பட்ட அனுபவங்களுடன் உலக அளவில் சிங்கப்பூரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக காட்சியகத்தில் பார்வையாளர்களின் அனுபவம் அமையும்.

‘நாம் யார்’ என்ற அடிப்படைக் கேள்வியுடன் இவ்வட்டாரத்திலும் உலகிலும் சிங்கப்பூர் அடைந்துள்ள உருமாற்றத்தைப் பார்வையாளர்கள் அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் காட்சியகம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளுடன் ஒருங்கிணைந்த சிங்கப்பூரர்களின் வாழ்க்கை முறைகள் அன்றுமுதல் பின்னோக்கிச் சென்று, தற்காலத்தையும் உள்ளடக்கி முன்னோக்கிச் செல்லும் இலக்குடன் மக்களுக்கென சிறப்பான தனிப்பட்ட அதிநவீன வடிவமைப்புகளுடன் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்