முதியோர் பராமரிப்புச் சேவை வழங்கும் ‘ஆக்டிவ் குளோபல் ரெஸ்பைட் கேர்’ நிறுவனத்துக்கு, வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார (இடர் நிர்வாக) விதிமுறைகளின்கீழ் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3), $7,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர், மூத்த குடிமக்கள் தங்கள் வேனில் ஏறுவதற்கு உதவி செய்துகொண்டிருந்தனர். அப்போது சக்கர நாற்காலிக்கான தளத்திலிருந்து கீழே விழுந்த முதியவர் ஒருவரின் தலை தரையில் மோதியது.
அச்சம்பவத்தில் 76 வயது ஹாசன் முகமது கார்ச்சி அர்சன் ஒஸ்மான், நினைவற்ற நிலையில் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
தலையில் ஏற்பட்ட காயத்தால், 2021 பிப்ரவரி 3ஆம் தேதி இரவு 9.35 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
வேனின் பின்புறம் சக்கர நாற்காலியை ஏற்றுவதற்கான தளம் தொடர்பில் நிறுவனம், உரிய பாதுகாப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் பாதுகாப்பு வேலை நடைமுறைகளையும் பின்பற்றத் தவறிவிட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவ நாளன்று வேலைபார்த்த நிறுவன ஊழியர்கள் இருவருக்கு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தலா $10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மியன்மார் நாட்டவரான மோ தடார் (சம்பவத்தின்போது 49 வயது) சுகாதாரப் பராமரிப்பு உதவியாளராகப் பணியாற்றினார். சிங்கப்பூரரான குவா கிம் செங் (சம்பவத்தின்போது 67 வயது) வேன் ஓட்டுநராகப் பணியாற்றினார்.
சக்கர நாற்காலியில் இயக்கத் தடைக் கருவி சரியாகச் செயல்படுவதை உறுதிப்படுத்த அவர்கள் இருவரும் தவறிவிட்டதால் திரு ஹாசன் உயிரிழக்க நேரிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சம்பவத்திற்கு முன்னர், ‘ஆக்டிவ் குளோபல்’ நிறுவனம் சிங்கப்பூரில் சில ஆண்டுகளாகச் சேவை வழங்கிவந்த நிலையில் இத்தகைய சம்பவங்களோ விபத்துகளோ நேர்ந்ததில்லை. உயிரிழந்த திரு ஹாசன் கிட்டத்தட்ட 500 முறை அந்நிறுவனத்தின் வேனில் நல்லபடியாகப் பயணம் செய்ததாகக் கூறப்பட்டது.
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு நிறுவனம் போக்குவரத்தின்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு வழங்குவதன் தொடர்பில் நடைமுறைகளை மேம்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

