தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதைகுழியிலிருந்து பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு $70,000 வெகுமதி

2 mins read
4b00122a-232a-4ecd-81dd-9afd669b80e8
புதைகுழியிலிருந்து பெண்ணைக் காப்பாற்றிய (இடமிருந்து) கணேசன் வீரசேகர், அன்பழகன் வேல்முருகன், பூமாலை சரவணன், சாத்தப்பிள்ளை ராஜேந்திரன், ஆறுமுகம் சந்திரசேகரன், பிச்சை உடையப்பன் சுப்பையா. மற்றொருவரான அஜித் குமார் படத்தில் இல்லை. - படம்: ரவி சிங்காரம்

தஞ்சோங் காத்தோங் சாலைப் புதைகுழியில் காருடன் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள் எழுவருக்கு $70,805.05 மதிப்பிலான மாதிரிக் காசோலையை ஆகஸ்ட் 10ஆம் தேதி, ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ அறநிறுவனம் வழங்கியது.

அந்தப் பணம் எழுவருக்கும் இடையே சரிசமமாகப் பிரிக்கப்பட்டு ($10,115.01) ஏற்கெனவே அவரவர் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அவர்கள் இந்தியாவிலுள்ள தம் குடும்பத்தினருக்கு அப்பணத்தை அனுப்பிவிட்டதாகக் கூறினர்.

“பொதுமக்கள் பலரும் இந்த நாயகர்களுக்கு நிதி திரட்டும்படி எங்களைக் கேட்டுக்கொண்டனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட நிதித் திரட்டில் பொதுமக்களின் நன்கொடைகள் மூலம் 43 மணி நேரத்தில் இந்தத் தொகையைத் திரட்டினோம்,” என்றார் ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ நிறுவனர் தீபா ஸ்வாமிநாதன்.

Giving.sg தளம் மூலம் நடைபெற்ற நிதித் திரட்டில் 1,639 பேரிடமிருந்து $72,241 திரட்டப்பட்டது. தளத்துக்குச் சேரவேண்டிய கட்டணத்தைக் கழித்தபின் மீதிப் பணம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டது.

“இவர்களில் பலரும் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிங்கப்பூரில் இருந்துள்ளனர். அதனால் வெளிநாட்டு ஊழியர்கள் எனச் சொல்வதைவிட இவர்களைச் சிங்கப்பூர்வாசிகள் என்றுதான் சொல்லவேண்டும்,” என்று தீபா கூறினார்.

ஹென்டர்சன் சாலையில் அமைந்துள்ள ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ கடையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களை நேரில் கண்டு பாராட்டப் பொதுமக்கள் பலரும் வந்திருந்தனர். காப்பாற்றிய ஊழியர்களில் அஜித் குமார் தவிர மற்ற ஆறு பேரும் வந்திருந்தனர்.

சிவப்பு உறைகள், அரிசி, உணவுப் பொருள்கள், கேக், அன்பளிப்புப் பைகள் போன்றவற்றைப் பொதுமக்கள் அவர்களுக்கு அன்பளிப்பாகத் தந்தனர்.

‘குடும்பச் செலவுகளை ஈடுகட்ட உதவும்’

சம்பவ நாளன்று, சக ஊழியர்களைப் புதைகுழியில் இறங்கவேண்டாமெனத் தடுத்து, கயிற்றை எடுத்துவரும்படிச் சொன்ன மேற்பார்வையாளர் பிச்சை உடையப்பன் சுப்பையாவின் மகள், இந்தியாவில் முதலாம் ஆண்டு மருத்துவப் பள்ளியில் படித்து வருகிறார். இதன்மூலம், மகளின் ஓராண்டுக்கான பல்கலைக்கழகச் செலவை ஈடுகட்ட முடியும் என்றார் அவர்.

29 வயதுப் பூமாலை சரவணனுக்கு அண்மையில்தான் திருமணமானது. இப்பணம் அவர் தம் குடும்பத்துக்காக வீடு கட்டும் முயற்சியில் கைகொடுக்கும் என்றார் அவர்.

திரு கணேசன் வீரசேகர், $5,000 செலுத்திச் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்ததாகக் கூறினார். அதற்கு வாங்கிய கடனைத் தீர்க்க இது உதவும் என அவர் கூறினார்.

56 வயது சாத்தப்பிள்ளை ராஜேந்திரனுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 47 வயது ஆறுமுகம் சந்திரசேகரனுக்கும் இரு பிள்ளைகள் உள்ளனர். “என் மகளின் படிப்புச் செலவுக்காக இந்தப் பணத்தை அனுப்பியுள்ளேன்,” என்றார் திரு ராஜேந்திரன்.

குறிப்புச் சொற்கள்