நன்கொடை அமைப்பான ‘கேர் கார்னர்’, எஸ்டி மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், வேலியன்ஸ் (Vallianz), யுஓஎல் குழுமம் ஆகிய ஒவ்வொன்றுடனும் ஒரு புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளதாகத் அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 11) நடைபெற்ற கேர் கார்னரின் உணவு விருந்து நிகழ்ச்சியில் அந்த அறிவிப்பு வெளியானது. ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அந்நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
யுஓஎல்லுடனான புரிந்துணர்வுக் குறிப்பு, குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த கூடுதலான பிள்ளைகளுக்குக் கல்வி, சிறப்புத் தேவைகள் தொடர்பான ஏற்பாடுகளை சலுகை விலையில் செய்துதர வகைசெய்யும். வேலியன்ஸ், எஸ்டி மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றுடனான புரிந்துணர்வுக் குறிப்புகள், மூத்தோருக்கு சத்துணவு வழங்குவது, மூத்தோர் எதிர்கொள்ளக்கூடிய தனிமைக்குத் தீர்வுகாண்பது போன்ற முயற்சிகளுக்குக் கைகொடுக்கும்.
இந்தப் புரிந்துணர்வுக் குறிப்புகளின் மொத்த மதிப்பு 700,000 வெள்ளிக்கும் அதிகமாகும். அவற்றின்கீழ் அடுத்த மூவாண்டுகளுக்கு இது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
யுஓஎல் தலைமை நிர்வாகி லியம் வீ சின், வேலியன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி லிங் யோங் வா ஆகியோரின் முன்னிலையில் புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாயின.
கேர் கார்னரின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டியன் சாவ், “சிறார், மூத்தோர் ஆகியோர் நீண்டகால ஆதரவு தேவைப்படும் மிக முக்கியமான இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இந்தப் பங்காளித்துவங்கள், இதுபோன்ற தேவைகளை ஆராய்ந்து சமூகத்தில் பல தலைமுறைகளின் நலனில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளைக் கையாள வகைசெய்கின்றன,” என்றார்.
பல சமூக சேவை நடவடிக்கைகள் குறுகிய காலத்துக்கானவை அல்ல என்றும் பலன்களைப் பொதுவதாக ஒரு தலைமுறை சென்ற பிறகுதான் காணமுடியும் என்றும் அமைச்சர் சான் சுன் சிங் குறிப்பிட்டார்.
“வருங்காலத்தில் எத்தனை பேருக்கு நாம் கைகொடுக்கத் தேவையில்லை என்பதே இதன் தொடர்பில் நமது வெற்றிக்கான அளவுகோலாக இருக்கும்,” என்று திரு சான் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
இரவு விருந்து நிகழ்ச்சியில் காசோலையும் வழங்கப்பட்டது. யுஓபி வங்கி, கேர் கார்னரின் சிறார் சேவைகளுக்கென 900,000 வெள்ளியை நன்கொடையாக வழங்கியது.
வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டுவது அந்நடவடிக்கையின் நோக்கமாகும்.