சிங்கப்பூரில் முதியோர் சக முதியோர்க்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ‘ஏஜ் வெல் காக்கீஸ்’ எனும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதிமூப்படைந்த சமூகமாக மாறியுள்ள சிங்கப்பூரில், முதியோர் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வதை ஊக்குவிக்க 700,000 தொண்டூழிய வாய்ப்புகள் வழங்கப்படும்.
தோ பாயோவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) நடுவத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) நடைபெற்ற தேசிய முதியோர் கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் சுகாதார மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
தொண்டூழியம் செய்ய விரும்பும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியோரின் விருப்பம், திறன், நேரம் ஆகியவற்றிற்கு ஏற்பச் சமுதாயப் பராமரிப்பு வாய்ப்புகள் இதில் பகிர்ந்தளிக்கப்படும்.
சிங்கப்பூரர்கள் நீண்ட காலம் வாழ்ந்தாலும் அவர்களின் நல்வாழ்வுக் காலத்திற்கும் ஆயுட்காலத்திற்கும் இடையே இடைவெளி நிலவுகிறது. முதியோரிடையே நிலவும் சமூகத் தனிமை உணர்வைத் தவிர்ப்பதும், சமூகப் பிணைப்பை வலுப்படுத்தி அவர்களின் வாழ்வில் புது நோக்கத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அடுத்த ஈராண்டுகளில் முதியோர் கிட்டத்தட்ட 16,500 பேர் இத்தொண்டூழிய வாய்ப்புகளைப் பயன்படுத்துவர் என்று சுகாதார அமைச்சு எதிர்பார்க்கிறது.
சக முதியோரை மருத்துவச் சந்திப்புகளுக்கு அழைத்துச் செல்லுதல், உணவு வழங்குதல், துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்களின் நடவடிக்கைகளுக்குத் திட்டமிடுதல் போன்ற பணிகளை முதியோர் மேற்கொள்ளலாம். அதிகச் சுமையைத் தூக்கும்படி இல்லாமல், எளிதாக அமர்ந்தபடி ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்கும் வகையிலான எளிய பணிகளே அளிக்கப்படும். துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றில் இவ்வாய்ப்புகள் கிடைக்கும்.
இப்பணிகளை இணைக்கச் சுகாதார அமைச்சும் ஒருங்கிணைந்த பராமரிப்புக் கழகமும் பல்வேறு அமைப்புகளுக்குத் தேவையான நிதி ஆதரவை வழங்கும்.
தொண்டூழியர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையிலும் அவர்களின் தொடர் பங்கேற்பை ஊக்குவிக்கவும் 2028 ஜூலை 31ஆம் தேதி வரை ரொக்கமாகவோ சலுகைப் பற்றுச்சீட்டுகளாகவோ ஊக்கத்தொகை வழங்கப்படும்.
விருப்பமுள்ளோர் இணையத்தளம் அல்லது உதவித் தொலைபேசி எண் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மூத்தோருக்கான கற்றல் வாய்ப்புகள்
அத்துடன், முதியோருக்காக 150க்கும் மேற்பட்ட நலவாழ்வுக் கற்றல் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. சத்துணவு, விழுவதைத் தவிர்த்தல் போன்றவை தொடர்பான இப்பயிற்சிகளுக்கு 60 வயது நிரம்பிய குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் முழு மானியம் அளிக்கப்படுகிறது.
மேலும், முதியோரிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க ‘த நெக்ஸ்ட் பேஜ்’ என்ற வழிகாட்டி ஏடு ஒன்றையும் தேசிய நூலக வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
