ஈசூன் வீவக கட்டடத்தின் கீழே பெண்ணின் சடலம்

ஈசூன் வீவக கட்டடத்தின் கீழே பெண்ணின் சடலம்

படம்: ஏஷியாஒன் ஊடகம்

23 Mar 2026 - 5:19 pm

1 mins read

ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடத்தில் 71 வயது மாது திங்கட்கிழமை (மார்ச் 23) காலை மாண்டு கிடந்தார். ஈசூன் அவென்யூ 5, புளோக் 701B எனும் முகவரியில் காலை 7.10 மணியளவில் சம்பவம் நடந்தது.

அக்கட்டடம் பெரும்பாலும் ஓரறை, ஈரறை வீடுகள் கொண்டது என ஏஷியாஒன் ஊடகம் தெரிவித்தது.

காலை 10 மணியளவில் ஊடகத்தினர் அக்கட்டடத்தை அடைந்தபோது அங்கு காவல்துறை வாகனங்களுடன் அவசர மருத்துவ உதவி வாகனம் ஒன்றும் இருப்பதைக் கண்டனர்.

இரு கட்டடங்களுக்கு இடையே கீழ்த்தளத்தில், மாதின் சடலம் காவல்துறை கூடாரத்திற்குள் வைக்கப்பட்டிருந்தது. அதற்குக் காவலாக ஒரு அதிகாரி நின்றுகொண்டிருந்தார்.

இறந்த மாது அக்கட்டடத்தின் 11வது மாடியிலிருந்து விழுந்ததாக நம்பப்படுகிறது.

ஊடகத்தின் கேள்விக்குப் பதில் அளிக்கையில், அந்த மாது கட்டடத்தின்கீழ் அசைவின்றிக் கிடந்ததாகவும் அங்கு வந்த மருத்துவ உதவியாளர் அவர் மரணமடைந்துவிட்டதை உறுதி செய்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

மாது உயர்மாடியில் இருந்து விழுந்ததைக் காவல்துறையும் உறுதிப்படுத்தியது. முதற்கட்ட விசாரணையில், அவரது மரணத்தில் சூதும் இல்லை என்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்
உயிரிழப்புகட்டடம்ஈசூன்