சிங்கப்பூரில் தனியார் மருத்துவக் காப்புறுதிக்கான கூடுதல் திட்டமான ‘ஐபி ரைடர்’ அம்சத்தைக் கைவிட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2025ஆம் ஆண்டில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 112,000க்கும் மேற்பட்டோர் விருப்பத்தின் பேரில் வாங்கக்கூடிய இந்தக் கூடுதல் காப்புறுதியைத் துறந்துள்ளனர்.
இது, 2024ஆம் ஆண்டில் ‘ஐபி ரைடர்’ அம்சத்தைத் தொடர விரும்பாமல் கைவிட்ட 65,000 பேருடன் ஒப்பிடுகையில் 72 விழுக்காட்டிற்கும் அதிகமான உயர்வாகும்.
தேசிய மருத்துவக் காப்புறுதித் திட்டமான மெடிஷீல்ட் லைஃப் வழங்கும் அடிப்படைப் பலன்களுக்கு மேலாக, கூடுதல் மருத்துவக் கவனிப்பை வழங்குவதற்காகத் தனியார் மருத்துவக் காப்புறுதி நிறுவனங்களால் ‘ஐபி’ திட்டம் வழங்கப்படுகிறது. இதில் கைச்செலவுத் தொகையைக் குறைத்துக்கொள்வதற்கு ‘ரைடர்’ பாதுகாப்புத் திட்டம் பெரிதும் கைகொடுக்கிறது.
ஆக அண்மைய புள்ளிவிவரங்களின்படி, ஏறத்தாழ 2 மில்லியன் ரைடர் காப்புறுதிதாரர்களில் ஏறத்தாழ 5.6 விழுக்காட்டினர் 2025ல் இத்திட்டங்களை முழுமையாகக் கைவிட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
அண்மை ஆண்டுகளில் தொடர்ந்து மளமளவென அதிகரித்துள்ள சந்தா தொகை உயர்வைச் சமாளிக்க முடியாமல் காப்புறுதிதாரர்கள் இத்தகைய முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தகவல்படி, 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், ஐபி ரைடர்களுக்கான சந்தா தொகை ஆண்டுதோறும் சராசரியாக 17.2 விழுக்காடு உயர்ந்துகொண்டே வந்துள்ளது.
காப்புறுதிதாரரின் வயது 50லிருந்து 70ஆக உயரும்போது, அவருக்கான வருடாந்தர ரைடர் சந்தா தொகை மூன்று மடங்கு வரை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஒருவர் தமது 70 வயதை எட்டும்போது, ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய ரைடர் தொகை மட்டுமே $9,000 வரை எட்டக்கூடும். அத்துடன், அடிப்படை ஐபி திட்டத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால், காப்புறுதி நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாப்பு வரம்பைப் பொறுத்து, அந்தத் தொகை ஆண்டுக்கு $12,700 முதல் $22,700 வரை அதிகரிக்கக்கூடும்.
சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் மெடிஷீல்ட் லைஃப் கட்டாயக் காப்புறுதி உண்டு. இது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கும் புற்றுநோய்க்கான கதிரியக்கச் சிகிச்சை, சிறுநீரக நோயாளிகளுக்கான ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை போன்ற குறிப்பிட்ட சில வெளிநோயாளி சிகிச்சைகளுக்கும் பாதுகாப்பளிக்கிறது.
உயர்தர படுக்கைப் பிரிவுகள் அல்லது தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற விரும்புவோர் ஐபி திட்டங்களை வாங்குகின்றனர். 2024ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, சிங்கப்பூர்வாசிகளில் ஏறத்தாழ 71 விழுக்காட்டினர் (ஏறக்குறைய 3 மில்லியன் பேர்) ஐபி காப்புறுதியைப் பெற்றுள்ளனர்.
அடிப்படை ஐபி திட்டத்திற்கு மேல் ரைடர்களைச் சேர்க்கும்போது, நோயாளி தமது சொந்த பணத்தில் செலுத்த வேண்டிய தொகை, இணைக் கட்டணம் ஆகியவற்றுக்கு அது உதவும். எஞ்சிய தொகையைக் காப்புறுதி நிறுவனமோ அல்லது மெடிஷீல்ட் லைஃப்போ ஏற்கும்.
சென்ற செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங், ஐபி, அதன் ரைடர் சந்தா தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல காப்புறுதிதாரர்கள் தங்களது திட்டங்களை அடுத்த நிலைக்குக் குறைத்தோ அல்லது முற்றிலும் ரத்துசெய்தோ வருகின்றனர் என்றும் கடந்த மூன்றாண்டுகளில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது என்றும் விளக்கமளித்திருந்தார்.
ஐபி திட்டங்களைப் பொறுத்தவரை, வார்டுகள் தரக்குறைப்பு, ரத்து செய்தவர்களின் எண்ணிக்கை 2023ல் 99,000ஆகவும், 2024ல் 105,900ஆகவும் இருந்த நிலையில், 2025ல் 128,200ஆக உயர்ந்தது. அதேபோல, ரைடர்களைப் பொறுத்தமட்டில் இந்த எண்ணிக்கை 2023ல் 84,800ஆகவும் 2024இல் 103,400ஆகவும் 2025ல் அதிரடியாக 181,800ஆகவும் அதிகரித்தது.
