74 பேருக்கு அரசாங்கச் சேவை ஆணைய உபகாரச் சம்பளம்

74 பேருக்கு அரசாங்கச் சேவை ஆணைய உபகாரச் சம்பளம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Jul 2026 - 7:57 pm

2 mins read

இவ்வாண்டு 74 பேருக்கு அரசாங்கச் சேவை ஆணைய உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் ஹுவா சொங் கல்விநிலையத்தின் முன்னாள் மாணவர் ஏம்பர் கோ.

புதிய கட்டமைப்புகளை உருவாக்கவும், சீனாவின் அதிவிரைவில் வளர்ந்துவரும் தொழில்நுட்ப ஆற்றல்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் அவர் ஷங்ஹாய் ஜியாவ் டொங் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல முடிவெடுத்தார்.

சிங்கப்பூர் பாதுகாப்பான, மேலும் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய சமூகமாகத் திகழ்வதற்கு உதவ, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் தமக்கு ஆர்வம் உள்ளதாக கோ, 19, கூறினார்.

மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற உபகாரச் சம்பள நிகழ்வை முன்னிட்டு கோ பேசினார்.

“சீனாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயில்வதன் மூலம், என்னால் அண்மைய தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்துகொள்ளமுடியும். அதோடு, சீனப் பேராசிரியர்களுடனும் ஆராய்ச்சியாளர்களுடனும் பணியாற்றும் அனுபவம் எனக்குக் கிடைக்கும்,” என்றார் கோ.

பத்துக்கும் மேற்பட்டோர் சிங்கப்பூரில் பயில்வார்கள். 61 பேர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்களில் 43 பேர் பிரிட்டனுக்கும், 12 பேர் அமெரிக்காவுக்கும், 4 பேர் சீனாவுக்கும், ஒருவர் ஜெர்மனிக்கும் மற்றொருவர் ஜப்பானுக்கும் செல்கின்றனர்.

அரசாங்கச் சேவை ஆணையம் பல்லாண்டுகளாக மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளது. இருந்தாலும், சிங்கப்பூருக்காகப் பணியாற்றுவோரைத் தேர்ந்தெடுப்பது, மேம்படுத்துவது, பணியில் அமர்த்துவது போன்றவற்றின் தொடர்பில், ஆணைய உறுப்பினர்களின் முடிவுக்குப் பதிலாகச் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தமுடியாது என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.

பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சான், சிறிய பணிகளைக்கூட அர்த்தமுள்ள வகையில் மேற்கொள்ளுமாறு உபகாரச் சம்பளம் பெற்றவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் முன்னாள் மாணவர் சிவா சாதுர்வா, 21, உபகாரச் சம்பளம் பெற்றவர்களில் மற்றொருவர். அவர் சட்டம் பயில, லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரிக்குச் செல்வார்.

பொதுச் சேவையின் பல்வேறு துறைகளில் பணியாற்றவும் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பொது நிறுவனங்கள் எவ்வாறு இணைந்துச் செயல்படலாம் என்பதைக் கற்றுக்கொள்ளவும் ஆவலாக இருப்பதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
உபகாரச் சம்பளம்மாணவர்கள்அரசாங்கம்