தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாடகை வீட்டில் வசிப்போர் சொந்த வீடு வாங்க $75,000 மானியம்

2 mins read
387caf35-d9c5-4504-ad4d-bbce86659271
மேம்படுத்தப்பட்ட புதிய தொடக்கத்திற்கான வீட்டுத் திட்டத்தின்கீழ் (enhanced Fresh Start Housing Scheme) தகுதிபெறும் குடும்பங்களுக்கு ஈரறை ஃபிளெக்ஸி அல்லது மூவறை வீடுகளை வாங்குவதற்கான மானியம் $75,000 ஆக அதிகரிக்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாடகை வீடுகளில் வசிக்கும் குழந்தைகளைக்கொண்ட குடும்பங்கள் புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) ஈரறை ஃபிளெக்ஸி அல்லது மூவறை வீட்டை வாங்கும்போது அதிக மானியங்களைப் பெறுவார்கள்.

தகுதி பெற்ற, முதல் முறையாக வீடு வாங்கும், வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பங்கள் குறுகிய கால குத்தகை வீடுகளை வாங்க அனுமதிக்கப்படுவர்.

குறைந்த வருமானம் ஈட்டும், எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலையில் உள்ள, அதிக சவால்களை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டங்களை பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

மேம்படுத்தப்பட்ட புதிய தொடக்கத்திற்கான வீட்டுத் திட்டத்தின்கீழ் (Enhanced Fresh Start Housing Scheme) தகுதிபெறும் குடும்பங்களுக்கு ஈரறை ஃபிளெக்ஸி அல்லது மூவறை வீடுகளை வாங்குவதற்கான மானியம் $75,000 ஆக அதிகரிக்கப்படுகிறது. இது முன்னர் $50,000 ஆக இருந்தது. புதிய தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) திட்டம் அல்லது எஞ்சிய வீடுகள் விற்பனைத் திட்டத்தின் கீழ் அவர்கள் வீடுகளை வாங்கலாம்.

முதல் முறையாக வீடு வாங்க விரும்பும் வாடகை வீட்டில் பிள்ளைகளுடன் வாழும் குடும்பங்கள், மருத்துவப் பிரச்சினைகள் அல்லது ஒற்றைப் பெற்றோராகப் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய சூழல் போன்று பொதுவாக வாழ்வில் அதிக சவால்களை எதிர்நோக்குவர்.

எனவே, முழுமையான 99 ஆண்டுக் குத்தகைக் காலத்தில் வீடு வாங்க அவர்கள் சிரமப்படக்கூடும். அதனால் அவர்களுக்கு இந்த ஈரறை ஃப்ளெக்ஸி வீடுகள் கைகொடுக்கும் என்றார் பிரதமர்.

இந்த உதவித் திட்டங்கள் குறித்து, அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கான விவாதத்தின்போது தேசிய வளர்ச்சி அமைச்சு பின்னர் விவரிக்கும் என்றார் திரு வோங்.

18 வயதுக்கும் குறைவான குறைந்தது ஒரு பிள்ளை உள்ள, ஏற்கெனவே மானியத்துடன் கூடிய வீவக வீட்டை வாங்கிய குடும்பங்களுக்கு உதவுவதற்காக 2016ஆம் ஆண்டில் புதிய தொடக்கத்திற்கான வீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

வீட்டு விலையைக் கட்டுப்படியானதாக்க, ஈரறை ஃபிளெக்ஸி, மூவறை வீடுகள் 45 முதல் 65 ஆண்டு வரையிலான குத்தகைக் காலத்துக்கு விற்கப்படுகின்றன. வீட்டின் ஆக இளைய விண்ணப்பதாரருக்கு 95 வயதாகும் வரை குத்தகைக் காலம் இருக்க வேண்டும்.

புதிய தொடக்கத்திற்கான வீட்டுத் திட்டத்தின்கீழ் விற்கப்படும் வீடுகள், குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்கும் நிலையான வீடு கிடைப்பதை உறுதிசெய்ய 20 ஆண்டு குறைந்தபட்சக் குடியிருப்புக் காலத்தைக் கொண்டுள்ளன.

குறைந்த வருமானம் கொண்ட, எளிதில் பாதிக்கப்படும் நிலையிலுள்ள குடும்பங்கள் “நிலைத்தன்மை, சுயசார்பு, வாழ்வில் முன்னேற்றம்” பெற எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க அதிகாரிகள் அதிகம் செய்வார்கள் என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்