75 ஆண்டுகள், 75 கிலோமீட்டர்: பார்வைக் குறைபாடுள்ளோர் சங்க நடைப்பயணம்

75 ஆண்டுகள், 75 கிலோமீட்டர்: பார்வைக் குறைபாடுள்ளோர் சங்க நடைப்பயணம்

2 mins read
d563ca64-7e04-4bf6-b620-31376c7b31e3
அண்மையில் திறக்கப்பட்ட நினைவுச் சுவரோவியத்திற்குமுன் திரு சந்திர மோஹன். - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூர்ப் பார்வைக் குறைபாடுள்ளோர் சங்கம் (SAVH) தனது 75வது ஆண்டுகால சேவையைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி சனிக்கிழமை ஒரு நடைப்பயண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 

பார்வைக் குறைபாடுள்ளோர் தற்சார்புடன் வாழவும் சமூகத்துடன் முழுமையாக ஒன்றுகலக்கவும் ஆதரவளித்துவரும் சங்கத்தின் சேவையை எடுத்துரைக்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது. 

அந்த நடைப்பயணத்தில் ஒன்பது குழுக்கள் சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து புறப்பட்டு, இறுதியில் சிங்கப்பூர்ப் பார்வைக் குறைபாடுள்ளோர் சங்கத் தலைமையகத்தில் ஒன்றிணைந்தன. பார்வைக் குறைபாடுள்ளோர், பங்காளிகள், கொடையாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் பங்கேற்றனர். 

சங்கம் சேவையாற்றிய 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், அனைத்துக் குழுக்களும் சேர்ந்து மொத்தம் 75 கிலோமீட்டர் தொலைவைக் கடந்தன.

“அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்,” என்று சங்கத்தின் நிர்வாக இயக்குநர் சாமுவேல் சூ கேட்டுக்கொண்டார். 

நிகழ்வின் நிறைவாக, சங்க வளாகத்தில் 75வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் சிறப்பு நினைவுச் சுவரோவியம் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

“இதுபோன்ற நிகழ்ச்சிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும். பார்வையற்றவர்களும் தொண்டூழியர்களும் சங்கத்தின் பணியாளர்களும் ஒன்றாக நடந்துகொண்டே சிரித்துப் பேசி பழகினோம்,” என்றார் 75 வயது சந்திர மோஹன்.

உயர் ரத்த அழுத்தம் காரணமாகத் தம் பார்வையை இழந்த திரு சந்திர மோஹன் பார்வைக் குறைபாடுள்ளோர் சங்கத்திலிருந்து கடந்த 11 ஆண்டுகளாக ஆதரவு பெற்று வருகிறார்.

“பார்வைக் குறைபாடு உள்ளவர்களிடம் சென்று பேசுவதற்கு பலரும் தயங்குகின்றனர். பொது இடங்களில் அவர்களைக் கண்டால், அவர்களை அணுகி ஏதேனும் உதவி தேவையா என்று கேட்கலாம். சில நேரங்களில் எங்களுக்கு வழிகாட்டுவது, பேருந்து எண்ணைப் பார்த்துச் சொல்வது போன்ற சிறிய உதவிகள் தேவைப்படும். மக்களிடையே இதுபோன்ற தொடர்புகளை ஊக்குவிப்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த தொடக்கமாக அமைந்தது,” என்று அவர் கூறினார். 

நிகழ்ச்சியில் தொண்டூழியர்கள் பலர் கலந்துகொண்டு பார்வைக் குறைபாடுள்ளோர்க்கு ஆதரவளித்தனர். அவர்களில் 32 வயது சுனில்பிரஷாந் ராஜேந்திரனும் ஒருவர். 

“சிங்கப்பூர்ப் பார்வைக் குறைபாடுள்ளோர் சங்கத்துடன் சேர்ந்து நான் தொண்டூழியம் செய்வது இதுவே முதன்முறை. பார்வையில்லாத நிலையிலும் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவற்றை என்னைவிட கூர்ந்து கவனிப்பது எனக்கு வியப்பூட்டியது. அவர்களின்மூலம் உலகத்தை ஒரு புதுக்கோணத்தில் அணுகி ரசிக்கக் கற்றுக்கொண்டேன்,” என்றார் சுனில்.

“இந்த நடைப்பயணத்தின்மூலம் சங்கப் பணியாளர்கள், தொண்டூழியர்கள், நிறுவனப் பங்காளிகள் என எங்களுக்கு ஆதரவளிப்போர் அனைவரும் ஒன்றுகூடி, பார்வைக் குறைபாடு உடையோருடன் நேரம் செலவிட்டு, அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதே நோக்கம். இந்த நிகழ்ச்சியின்மூலம் பல புதிய நட்புகள் உருவாகியுள்ளன,” என்றார் சங்கத்தின் தொடர்பு, நிதி திரட்டு மேலாளர் ஜோனத்தன் யாப். 

அனைத்துலகப் பார்வைக் குறைபாடுள்ளோர் தினத்தை ஒட்டி அக்டோபர் 18ஆம் தேதியன்று அவர்களுக்கென கலைத்திறன் போட்டி ஒன்றை கரையோரப் பூந்தோட்டத்தில் நடத்த சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது.

அப்போட்டிக்கு ஆதரவளிக்க அல்லது சிங்கப்பூர் பார்வைக் குறைபாடுள்ளோர் சங்கத்திற்கு நன்கொடை வழங்க விரும்புவோர் மேல்விவரங்களுக்கு சங்கத்தின் இணையத்தளத்தை (https://savh.org.sg) அணுகலாம்.

குறிப்புச் சொற்கள்