தெம்பனிசில் இவ்வாண்டு (2024) கிட்டத்தட்ட 77 காக்கைக் கூடுகள் அகற்றப்பட்டதாகத் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல், போக்குவரத்து அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளருமான திரு பே யாம் கெங் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2ஆம் தேதி அவர் ஃபேஸ்புக்கில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
ஜூலை மாதம், குடியிருப்பாளர்களைக் காகம் தாக்கியது தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்தன.
ஜூலை மாத மத்தியில் புளோக் 485B தெம்பனிஸ் அவென்யூ 9ல் காகம் மனிதர்களைத் தாக்கியதை அடுத்து தேசியப் பூங்காக் கழகம் கருத்தாய்வு ஒன்றை நடத்தியதாகத் திரு பே கூறினார்.
அச்சம்பவத்தில், இரண்டு காக்கைக் குஞ்சுகள் தரையில் காணப்பட்டதாகவும் அவை கூட்டிலிருந்து கீழே விழுந்திருக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காக்கைக் குஞ்சுகள் அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும் அதன் பிறகு பெரிய காகங்கள் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதை நிறுத்தியதாகவும் திரு பே கூறினார்.
“பெரிய காகங்கள் தங்கள் குஞ்சுகளுக்கு அபாயம் ஏற்படக்கூடும் என்று கருதினால் மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும். அது அவற்றின் பாதுகாப்பு உணர்வால் விளைவது,” என்றார் அவர்.
“காக்கைக் குஞ்சுகள் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டதும் அவை தாக்குதலை நிறுத்திவிட்டன,” என்று திரு பே கூறினார்.
அந்தக் காக்கைக் கூட்டுடன் மேலும் மூன்று கூடுகளை தெம்பனிஸ் நகர மன்றம் அகற்றியது. அதற்கு அடுத்த வாரம், தெம்பனிஸ் ஸ்திரீட் 44ல் புளோக் 461 முதல் 470 வரையிலான குடியிருப்புகள் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மரங்களிலிருந்து மேலும் ஐந்து கூடுகள் அகற்றப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
நகர மன்றத்தின் உதவியோடு, தெம்பனிஸ் ஸ்திரீட் 42 முதல் 45 வரையிலான பகுதியிலிருந்து 77 கூடுகள் அகற்றப்பட்டதாகத் திரு பே குறிப்பிட்டார்.
தேசியப் பூங்காக் கழகத்தின் உதவியோடு தெம்பனிஸ் நகர மன்றம் காகங்களைப் பிடித்து, கொல்லும் நடவடிக்கையைத் தொடரும் என்றார் அவர்.
காகங்கள் கடந்த காலக் காயங்களை நினைவில் வைத்துத் தாக்கக்கூடியவை என்று வருணித்த திரு பே, குடியிருப்பாளர்கள் தேவையின்றி அவற்றைத் தொந்தரவு செய்யவேண்டாம் என வலியுறுத்தினார்.
காகங்கள் தாக்கினால், மாற்றுப் பாதையில் செல்லும்படியும் மரங்கள் அடர்ந்த பகுதியில் அவை கூடு கட்டியிருக்கக்கூடும் என்பதால் அத்தகைய பகுதிகளைத் தவிர்க்கும்படியும் அவர் ஆலோசனை கூறினார். காகங்களுக்கு மனிதர்களின் முகங்களை நினைவில் கொள்ளும் ஆற்றல் உண்டு என்பதையும் அவர் சுட்டினார்.
சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், குப்பைகளை உரிய முறையில் மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டியில் போடுதல், பழங்களை வளர்க்கும் குடியிருப்பாளர்கள் அவற்றை உரிய காலத்தில், வழக்கமான இடைவெளியில் அறுவடை செய்தல், செல்லப் பிராணிகளுக்கு வெளியிடங்களில் உணவு அளிப்போர் மீதியுள்ள அல்லது கீழே சிந்திய உணவை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளை அவர் வலியுறுத்தினார்.
குடியிருப்பாளர்கள் காக்கைக் கூடுகளைப் பார்க்க நேரிட்டால் அதுகுறித்து நகர மன்றத்துக்குத் தகவல் அளிக்கும்படி திரு பே கேட்டுக்கொண்டார்.