பிடிபட்ட காகங்களை விடுவித்த 77 வயது முதியவருக்கு அபராதம்

பிடிபட்ட காகங்களை விடுவித்த 77 வயது முதியவருக்கு அபராதம்

படம்: சிஎன்ஏ

27 Jan 2026 - 4:49 pm

1 mins read

தேசிய பூங்காக் கழகம் நியமித்த நிறுவனம் காகப்பொறியில் பிடித்து வைத்திருந்த காகங்களை 77 வயது முதியவர் விடுவித்த குற்றத்துக்கு அவருக்கு $500 அபராதம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) விதிக்கப்பட்டது.

நீதிமன்ற விசாரணையில், நியமிக்கப்பட்ட நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் முதியவர் தன்னிச்சையாக $370 செலுத்தியதும் காகப் பொறிக்கு ஏற்பட்ட குறைந்தபட்ச சேதமும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

பொதுச் சேவை சார்ந்த அமைப்பின் செயல்பாட்டை சீர்குலைத்த குற்றத்தை டான் சீ சீ என்ற அந்த முதியவர் ஒப்புக்கொண்டார்.

வனவிலங்குகளைக் கட்டுப்படுத்துவதில் தேசிய பூங்காக் கழகம் முக்கிய அங்கம் வகிக்கின்றது என்று அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதன்படி, பலவித வழிமுறைகளைக் கழகம் பயன்படுத்தி விலங்குகளையும் பறவைகளையும் கட்டுக்குள் வைத்துள்ளது. காகங்களைப் பொறுத்தவரை அவை இங்கு பூர்வீகம் இல்லாது, சிங்கப்பூருக்கு வெளியில் இருந்து வருபவை.

அவற்றின் ஊடுருவலால் பல பாதிப்புகள் பிற விலங்குகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுகிறது. அதன் குஞ்சுகளைத் தற்காப்பதில் தீவிரமான குணத்தைக் கொண்ட காகங்கள், தாக்குதல் நடத்தத் தயங்காதவை. உண்ணும்போதும் கழிவுகளை ஏற்படுத்துவதோடு பொது அசுத்தத்துக்கும் அவை காரணமாகின்றன.

தேசிய பூங்காக் கழகம், கடந்த 2024ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுவரையில் 12,000 காகங்களின் கூடுகளையும் 20,000 காகங்களையும் அப்புறப்படுத்தியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் 2023ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து காகங்கள் குறித்து புகார் அளித்து வந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
காகம்குற்றம்தேசிய பூங்காக் கழகம்நீதிமன்றம்