அடுத்த ஐந்து ஆண்டுகளில் போக்குவரத்து மற்றும் இணைப்புக்கான ஆய்வு மற்றும் புத்தாக்கத்தில் சிங்கப்பூர் தனது முதலீட்டை $800 மில்லியனாக, அதாவது இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்த்தும் என்று போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 7) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மரின் பரேட் - பிராடல் ஹைட்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் தலைமையிலான, போக்குவரத்துக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழு (ஜிபிசி) முன்வைத்த உலகளாவிய போக்குவரத்து மையமாக சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்துவது குறித்த தீர்மானம் தொடர்பில் அவர் பேசினார்.
“தொடர்ந்து மாறிவரும் புவிசார் அரசியல் சூழலையும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களையும் நாம் எதிர்கொள்வதால், உலகளவில் நாம் எவ்வாறு இணைந்திருக்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிங்கப்பூர் உள்ளது” என்பதால், ஜிபிசி குழு இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தது என்று திருவாட்டி டின் கூறினார். மேலும், இந்த இணைப்புத்தன்மை பொருளியல் செழிப்பைச் சாத்தியமாக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
விநியோகத் தொடர் சங்கிலிகள் மேலும் மின்னிலக்கமயமாகும்போது, இணைப்புத்திறன் தொழில்நுட்பத்தை அதிகளவில் சார்ந்திருக்கும். எனவே, எதிர்காலத்தை மையமாகக் கொண்டிருப்பது போக்குவரத்து அமைச்சின் உத்தியின் ஒரு பகுதியாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
இன்று போக்குவரத்து செயல்படும் விதத்தை முற்றிலுமாக மாற்றியமைக்கக்கூடிய யோசனைகளுக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் இந்த நிதியைப் பயன்படுத்தும் என்று அவர் கூறினார்.
இது, ரயில்களை மிகவும் திறமையாகப் பராமரித்துச் சரிசெய்யும் ஒரு முழுமையான தானியக்க எம்ஆர்டி பணிமனையாகவோ அல்லது சுற்றியுள்ள விமான நிலையங்களின் தேவைகளுக்கு இடமளிக்கும் வகையில் நமது வட்டார வான்வெளித் திறனை அதிகரிக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு சார்ந்த வான்வழிப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பாகவோ இருக்கலாம்.
இரட்டை மின்னிலக்கச் சாதனங்களைப் பயன்படுத்தி, கப்பல் நிறுவனங்களுடன் இணைந்து, கொள்கலன்களை நிகழ்நேரத்தில் எவ்வாறு நகர்த்துவது என்பது குறித்து முடிவெடுக்கும் ஒரு திறன்மிகு துறைமுகக் கட்டமைப்பையும் இது உருவாக்கக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.
“அடுத்த பத்தாண்டுகளில் இந்தத் திட்டங்கள் வெற்றி பெற்றால், சிங்கப்பூர் உலகின் முக்கியப் போக்குவரத்து மற்றும் தளவாட மையங்களில் ஒன்றாகத் தொடர்ந்து நீடிக்கும். ஆனால் அது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளிக்கும்,” என்று விவரித்தார் போக்குவரத்து தற்காலிக அமைச்சர்.
தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் ஆய்வு, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு 2030 முதன்மைத் திட்டத்தின் கீழ் இந்த முதலீடு வருகிறது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இது, விமானப் போக்குவரத்து, கடல்வழிப் போக்குவரத்து மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறைகள் முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதற்கான பன்முகத் திறன்களைக் கட்டமைக்கும்.
இதன் மூலமும், இந்தத் துறைசார் திறன்களை வலுப்படுத்துவதன் மூலமும் தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு திட்டத்தின் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தமது உரையில் மேலும் விவரங்களை வழங்கிய போக்குவரத்து துணை அமைச்சர் பே யாம் கெங், $800 மில்லியன் முதலீட்டில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு, தன்னாட்சி மற்றும் இரட்டை மின்னிலக்கம் ஆகியவற்றில் பன்முகத் திறன்களை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் என்று கூறினார்.

