அக்டோபரில் விற்பனைக்கு வரவுள்ள 8,000 பிடிஓ வீடுகள்

அக்டோபரில் விற்பனைக்கு வரவுள்ள 8,000 பிடிஓ வீடுகள்

2 mins read
b6d25a3c-4d02-4b6e-9532-ea2c9e6e098d
தெங்கா உள்பட செம்பவாங் நார்த், ஈசூனின் சென்சாரு ஆகிய புதிய வீடமைப்புப் பேட்டைகளிலும் பிடிஓ வீடுகள் விற்பனை விடப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு அருகே உள்ள பே‌ஷோர் குடியிருப்புப் பேட்டையில் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) இரண்டு வீடமைப்புத் திட்டங்களில் மொத்தம் 2,500 வீடுகளை எதிர்பார்க்கலாம். அக்டோபர் மாதத்தில் அந்த வீடுகள் விற்பனைக்கு வரவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெங்கா உள்பட செம்பவாங் நார்த், ஈசூனின் சென்சாரு ஆகிய புதிய வீடமைப்புப் பேட்டைகளிலும் பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.

அவற்றுடன் சேர்த்து ஏழு பிடிஓ திட்டங்களின்கீழ் ஏறக்குறைய 8,000 வீடுகள் அக்டோபரில் விற்பனைக்கு வருகின்றன.

பிடோக், கேலாங், செம்பவாங், தெங்கா, தோ பாயோ, ஈசூன் ஆகிய பகுதிகளில் 7,960 வீடுகள் அக்டோபர் மாதத்தில் அறிமுகமாகும்.

பே‌ஷோரில் அறிமுகம் செய்யப்படும் இரண்டு பிடிஓ திட்டங்களில் மூத்தோருக்கும் ஒற்றையருக்கும் அதிக எண்ணிக்கையிலான ஈரறை வீடுகளை எதிர்பார்க்கலாம்.

கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள 2,500 வீடுகளில் கிட்டத்தட்ட பாதி, அதாவது 1,240 வீடுகள் ஈரறை வீடுகளாக இருக்கும். அவற்றுடன் ஏறக்குறைய 1,170 நாலறை வீடுகளும் 90 மூவறை வீடுகளும் கட்டப்படும்.

1,640 வீடுகள் உள்ள பெரியத் திட்டத்தில் ஈரறை, மூவறை, நாலறை வீடுகள் கட்டப்படும். அந்த வட்டாரத்தில் உணவுக் கடைகள், பிற கடைகள், பாலர் பள்ளிகள், துடிப்புடன் மூப்படையும் நிலையம், சிறுநீரகச் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய வசதிகள் அமைக்கப்படும்.

இத்தகைய திட்டங்கள் ‘பிளஸ்’ பிரிவின்கீழ் வரும் என்று சொத்துச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

அவை அதிகம் நாடப்படும் வீடுகளாகவும் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

நகர மையம், போக்குவரத்து மையங்கள் ஆகியவற்றுடன் பல்வேறு வசதிகளுக்கு அருகே கட்டப்படும் வீடுகள் ‘பிளஸ்’, ‘பிரைம்’ வீடுகள் என்று கருதப்படுகின்றன.

அத்தகைய வீடுகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வசித்த பிறகே அவற்றை விற்க முடியும்.

அத்தகைய வீடுகளுக்காக வழங்கப்பட்ட மானியங்களும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் திரும்ப பெற்றுக்கொள்ளும்.

குறிப்புச் சொற்கள்
பிடிஓவிற்பனைவீடுகள்