டிசம்பரிலிருந்து 82 தீங்குநிரல் மோசடிகள்; $625,000 இழப்பு

2 mins read
c6576c78-e56c-4454-bd07-43f47c3b9a1e
தீங்குநிரல் மோசடிகளுக்கு ஆளாகாமல் விழிப்புடன் இருக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை மக்களைக் கேட்டுக்கொள்கிறது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தீங்குநிரல் தொடர்புடைய குறைந்தது 82 மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அவற்றில் சுமார் 625,000 வெள்ளி பறிபோனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக், டிக்டாக் சமூக ஊடகத் தளங்களில் இடம்பெறும் பொய் விளம்பரங்களை நம்பி சிலர் இந்த வகை மோசடிக்கு ஆளாயினர். பயணம், சுத்திகரிப்புச் சேவை போன்றவற்றின் தொடர்பில் அத்தகைய விளம்பரங்கள் இடம்பெறும் என்று காவல்துறை வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 10) தெரிவித்தது.

அந்தச் சேவைகளில் விருப்பம் இருப்பதைத் தெரிவிக்க மோசடிக்கு ஆளாவோர் தங்களின் தொடர்புத் தகவல்களைப் பதிவிடுவர். மோசடிக்காரர்கள், அவர்களை வாட்ஸ்அப்வழி தொடர்புகொள்வர்.

உறுப்பினராவதற்குக் கட்டணமாக ஐந்து வெள்ளியையும் தொடர்புடைய ‘சேவைக்கான’ முன்பணத்தை அனுப்புமாறும் மோசடிக்காரர்கள் கேட்டுக்கொள்வர். ஏமாற்றப்படுவோர் பணத்தை அனுப்ப, தனிப்பட்ட விவரங்களை சட்டவிரோதமான முறையில் பெற வகைசெய்யும் இணைய முகவரி (phishing link) அவர்களிடம் தரப்படும்.

ஏமாற்றப்படுவோர் தங்களின் வங்கி அட்டை விவரங்களைப் பதிவிடும்போது இடையூறுகள் எழும். அதன் பின்னர், ‘பிரச்சினையை’ சரிசெய்ய மோசடிக்காரர்கள், ஏபிகே (APK) செயலியை வாட்ஸ்அப்வழி பதிவிறக்கம் செய்யச் சொல்வர்.

ஏபிகே, ஆண்ட்ரோய்ட் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடியது. அதைப் பதிவிறக்கம் செய்தால் மோசடிக்காரர்களால் பாதிக்கப்பட்டோரின் கைப்பேசி உள்ளிட்ட சாதனங்களை இருந்த இடத்திலிருந்தே இயக்க முடியும்.

அவ்வாறு மோசடிக்காரர்கள் பிறரை ஏமாற்றிப் பணம் பறித்து இத்தகைய மோசடியில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊங்கள் கைப்பேசியில் அபாயகரமான செயலியைப் பதிவிறக்கம் செய்திருந்தாலோ அது தீங்குநிரலால் பாதிக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் இருந்தாலோ கைப்பேசியை உடனடியாக ‘விமானப் பயண இயக்கமுறை’க்கு (flight mode) மாற்றிக்கொள்ளுமாறும் வைஃபை (Wi-Fi) தொடர்பை துண்டிக்குமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கைப்பேசிகளில் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்துக்கொள்ளுமாறும் மோசடிச் செயல்களுக்கு ஆளான அறிகுறிகள் கைப்பேசிகளில் இருப்பதை அடையாளம் காணுமாறும் காவல்துறை மக்களைக் கேட்டுக்கொள்கிறது; மோசடி குறித்து அதிகாரிகளிடமும் பிறரிடமும் தெரியப்படுத்துமாறும் காவல்துறை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்