சிங்கப்பூர் முழுவதும் நவம்பர் 16 முதல் நவம்பர் 20 வரை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில், போதைப்பொருள் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்திற்குரிய 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 21,500 வெள்ளிக்குமேல் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களில் கிட்டத்தட்ட 30 கிராம் ஹெராயின், 126 கிராம் ‘ஐஸ்’, 33 கிராம் கஞ்சா, 15 கிராம் கெட்டமின், 11 ‘எக்ஸ்டசி’ மாத்திரைகள் ஆகியவை அடங்கும் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) திங்கட்கிழமை (நவம்பர் 23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஒரு சோதனையின்போது, போதைப்பொருள் குற்றவாளிகள் எனச் சந்தேகிப்படும் இருவரின் குழந்தைகள் இருவரும், போதைப்பொருள் பயன்படுத்தும் கருவிகளும் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருப்பது கண்டறியப்பட்டதாக சிஎன்பி கூறியது.
அச்சம்பவத்தில், நவம்பர் 17ஆம் தேதி காலை அங் மோ கியோ அவென்யூ 3ல் உள்ள வீடு ஒன்றில் 43 வயதுப் பெண்ணையும் 38 வயது ஆடவரையும் சிஎன்பி அதிகாரிகள் கைது செய்தனர்.
போதைப்பொருள் பயன்படுத்தும் கருவிகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த அந்த வீட்டில், அப்பெண்ணின் 14 வயது மகளும், அந்த ஆடவரின் 11 மாதக் குழந்தையும் இருப்பது கண்டறியப்பட்டது. அக்குழந்தைகள் தற்போது அவர்களது நெருங்கிய உறவினர்களின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிஎன்பி தெரிவித்தது.
நவம்பர் 19ஆம் தேதி லேக்சைட் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் டிரைவ் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், 44 வயது ஆடவரையும் 26 வயதுப் பெண்ணையும் சிஎன்பி அதிகாரிகள் கைது செய்தனர். அங்கிருந்து கிட்டத்தட்ட 27 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் போதைப்பொருள் பயன்படுத்தும் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
