தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் கருத்தாய்வுகள்

பாதகமான இணையப் பதிவுகளை எதிர்கொண்டதாக 84% சிங்கப்பூர்வாசிகள் கருத்து

2 mins read
ffbd6d85-2a1b-423a-87e2-c1b4a1ce7b46
மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக்கில் தீங்கு விளைவிக்கும் பதிவுகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. அதனைத் தொடர்ந்து யூடியூப், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் வந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 84 விழுக்காட்டினர் இணையத்தில் தீங்கு விளைவிக்கும் பதிவுகளைக் கடந்த ஆண்டில் எதிர்கொண்டதாகக் கருத்தாய்வில் தெரிவித்துள்ளனர். இணைய மோசடி, இணையப் பகடிவதை முதலியவை அவற்றுள் சில. இணையத்தில் கேடு விளைவிக்கும் உள்ளடக்கத்தைச் சந்திக்க நேரிட்டோரின் விகிதம் கடந்த ஆண்டைவிட அதிகம்.

தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) வெளியிட்ட கருத்தாய்வில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. சென்ற ஆண்டு (2024) நவம்பருக்கும் இந்த ஆண்டு பிப்ரவரிக்கும் இடையில் கருத்தாய்வு நடத்தப்பட்டது. அதில் ஏறக்குறைய 2,000 சிங்கப்பூர்க் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் பங்கெடுத்தனர்.

மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக்கில் பாதகமான இணையப் பதிவுகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. அதனைத் தொடர்ந்து யூடியூப், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் வந்தன.

இணையத்தில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைச் சந்திக்க நேரிட்டோரின் விகிதம் அண்மை ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு (2024) அமைச்சு வெளியிட்ட கருத்தாய்வில் ஏறக்குறைய 75 விழுக்காட்டினர் பாதகமான இணையப் பதிவுகளை எதிர்கொண்டதாகக் கூறியிருந்தனர். அதற்கு முந்திய ஆண்டு அந்த விகிதம் 65 விழுக்காடாக இருந்தது.

இணையத்தில் மோசடிகள், தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்தல் போன்ற சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகள் அடிக்கடி வெளிவந்தன. அவற்றைத் தொடர்ந்து பாலியல், வன்முறை, இணையப் பகடிவதை, இன அல்லது சமயப் பதற்றம் முதலியவற்றைத் தூண்டும் பதிவுகள் இடம்பெற்றன.

இந்த ஆண்டுக் கருத்தாய்வில் கலந்துகொண்டோரில் 71 விழுக்காட்டினர் ஆள்மாறாட்டத்தின் மூலம் ஏமாற்றப்பட்டு உறவில் சிக்கியதாகத் தெரிவித்தனர். அவர்களில் கால்வாசிப் பேர் தேவையற்ற பாலியல் தகவல்களைப் பெற்றனர். 16 விழுக்காட்டினர் இணையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாயினர். அவற்றில் பெரும்பாலானவை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் தளங்களில் இடம்பெற்றன.

குறிப்புச் சொற்கள்