தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கிழக்காசியாவின் ‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் 84 சிங்கப்பூர் நிறுவனங்கள்

2 mins read
d8b8cdcc-8477-4e38-b2b6-ea8561d46a3d
டிபிஎஸ் வங்கி, வில்மர் இண்டர்நே‌ஷ்னல், ஓலாம் குரூப், பிளக்ஸ் ஆகிய உள்ளூர் நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முதல்முறையாக தென்கிழக்காசியாவிற்கென உலகப் புகழ்பெற்ற ‘ஃபார்ச்சூன் 500’ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் 84 சிங்கப்பூரில் இயங்கும் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. நிறுவனங்களின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு பட்டியல் வெளியிடப்பட்டது.

பட்டியலின் முதல் 10 இடங்களில் 5 சிங்கப்பூர் நிறுவனங்கள் உள்ளன.

சிங்கப்பூரின் பயன்பாட்டுப் பொருள் வர்த்தக நிறுவனமான டிராபிகுரா முதல் இடத்தில் உள்ளது. தாய்லாந்தின் பெட்ரோலிய நிறுவனமான ‘பிடிடி’ இரண்டாவது இடத்தில் உள்ளது.

மூன்றாவது இடத்தில் இந்தோனீசிய பெட்ரோலிய நிறுவனம் ‘பெர்த்தாமினா’ உள்ளது.

உள்ளூர் நிறுவனங்களான ‘வில்மர் இண்டர்நே‌ஷ்னல்’க்கு நான்காவது இடம், ‘ஓலாம் குரூப்’க்கு ஐந்தாவது இடம், ‘ஃபிளக்ஸ்’ஸுக்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது.

உள்ளூர் வங்கிகளான டிபிஎஸ், யூஓபி, ஒசிபிசி முறையே 10, 11, 12 ஆகிய இடங்களில் உள்ளன. சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு 18வது இடம் கிடைத்துள்ளது.

பட்டியலில் சிங்கப்பூர், மலேசியா, வியட்னாம், இந்தோனீசியா, தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பீன்ஸ் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

பட்டியலில் அதிகபட்சமாக 110 இந்தோனீசிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் இடத்தில் 107 நிறுவனங்களுடன் தாய்லாந்து உள்ளது. மலேசியாவின் 89 நிறுவனங்கள் பட்டியலில் உள்ளன.

இந்நிலையில், லாப அடிப்படையிலான பட்டியலில் முதல் மூன்று இடங்களும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது.

டிபிஎஸ் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் டிராபிகுரா உள்ளது. மூன்றாவது இடத்தை ஓசிபிசி பிடித்துள்ளது. யூஓபி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

கெப்பல் நிறுவனம் பத்தாவது இடத்திலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 12வது இடத்திலும் சிங்டெல் 14 இடத்திலும் வந்துள்ளன.

ஃபார்ச்சூன் ஒவ்வோர் ஆண்டும் உலகின் சிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிடும். அதன் பட்டியலுக்கு என தனி கவனிப்பாளர்கூட்டம் உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உட்பட வட்டார அளவிலும் ஃபார்ச்சூன் பட்டியலை வெளியிடும்.

குறிப்புச் சொற்கள்