மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 860 கிலோ காய்கறிகள், துவாஸ் சோதனைச்சாவடியில் இருந்த சரக்கு வாகனம் ஒன்றிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
ஐந்து உற்பத்தித் தரப்புகள் இக்குறிப்பிட்ட காய்கறிகளை இறக்குமதி செய்வது குறித்து தெரிவிக்கவில்லை அல்லது அளவைக் குறைத்துத் தெரிவித்திருந்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் ஜனவரி 23ஆம் தேதி தெரிவித்தன.
கூட்டாக நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையின்போது சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட இந்தக் காய்கறிகள் சிக்கின. சில்லறை வர்த்தகர்களுக்கும் இறக்குமதியாளர்களுக்கும் நேரடியாக விநியோகம் செய்யும் சரக்குகளை, கொண்டுவரும் விநியோகச் சரக்கு வாகனங்களை இந்த அமலாக்க நடவடிக்கை குறிவைத்தது.
சரக்கு வாகனத்தில் இருக்கும் சரக்குகளுக்கும் சரக்கு குறித்து தெரிவிக்கப்பட்ட தகவலுக்கும் முரண்பாடுகள் இருந்ததைக் குடிநுழைவு அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ள அனுப்பினர்.
சிங்கப்பூர் உணவு அமைப்பு மேற்கொண்டு விசாரித்து வருகிறது என்றும் அமலாக்க நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் தெரிவித்துள்ளது.
உரிமம் பெற்ற இறக்குமதியாளர்களே உணவுப் பொருள்களை சிங்கப்பூருக்குள் கொண்டு வரலாம். ஒவ்வொரு சரக்கு குறித்தும் தெரிவிக்கப்பட வேண்டும். அத்துடன் செல்லுபடியாகும் ஓர் இறக்குமதி உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு கள்ளத்தனமாக உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வோருக்கு $10,000 அபராதம், மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.