ஈசூன் ஈஸ்ட் வட்டாரத்தையும் காத்திப் எம்ஆர்டியையும் இணைக்கும் புதிய பேருந்துச் சேவை செப்டம்பர் 15 முதல் தொடங்குகிறது.
பொதுப் பேருந்து கட்டமைப்பை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய நடவடிக்கையின் முதல் பேருந்துச் சேவை அது என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) கூறினார்.
861 என்னும் எண் தாங்கிய அந்தப் பேருந்துச் சேவையை டவர் டிரான்சிட் நிறுவனம் வழங்கும்.
செம்பவாங் பேருந்து நிலையம், கேன்பரா எம்ஆர்டி நிலையம், காத்திப் எம்ஆர்டி நிலையம் ஆகியவற்றுக்கு இடையில் அந்தப் பேருந்து சேவையாற்றும் என்று டவர் டிரான்சிட் கூறியது.
பள்ளிக்கூடம் மற்றும் இதர வசதிகளுடன் ஈசூன், செம்பவாங் வட்டாரக் குடியிருப்பாளர்களை அந்தப் புதிய பேருந்துச் சேவை இணைக்கும் என்று திரு சீ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
காத்திப் பலதுறை மருந்தகம், விஸ்டரியா கடைத்தொகுதி, சன் பிளாசா ஆகியவற்றோடு சங் செங் உயர்நிலைப் பள்ளி (ஈசூன்), நேவல் பேஸ் தொடக்கப் பள்ளி, நார்த்லேண்ட் உயர்நிலைப் பள்ளி போன்றவற்றுக்கு அந்தப் பேருந்தில் செல்ல முடியும்.
ஒவ்வொரு நாளும் செம்பவாங் பேருந்து நிலையத்தில் இருந்து விடியற்காலை 5.30 மணிக்கு சேவையைத் தொடங்கும் 861 பேருந்து, இரவு 11.30 மணிக்கு சேவையை முடிக்கும்.
ஜூலை மாதம் தொடங்கப்பட்ட பேருந்து இணைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அறிமுகம் செய்யப்படும் முதல் பேருந்து சேவை 861 என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த சேவை அக்டோபர் மாதம் பொங்கோலில் அறிமுகம் காணும். பொங்கோல் குடியிருப்பாளர்களுக்கான நகர நேரடிச் சேவை அது.
பேருந்து இணைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், சிங்கப்பூரின் பல்வேறு வழித்தடங்களில் பேருந்து சேவை கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த எட்டாண்டுகளுக்கு $900 மில்லியன் செலவிடப்படும்.
புதிய நகரங்களுக்குப் பேருந்து சேவைகளை அறிமுகம் செய்வது, உச்சநேரத்தில் அதிகமான விரைவுச் சேவை பேருந்துகளை இயக்குவது, சில வழித்தடங்களில் அதிகமான பேருந்துகளை இயக்குவத போன்றவை அந்தத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும்.
திட்டத்தைத் தொடங்கிய நிலப் போக்குவரத்து ஆணையம், புதிய நகரங்களில் பேருந்து சேவையை அறிமுகம் செய்யும் பணி விரைவுபடுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளது.