தெம்பனிசில் 1,193 வீடுகளுடன் அமையவுள்ள புதிய கூட்டுரிமைக் குடியிருப்பு வளாகமான பார்க்டவுன் ரெசிடென்ஸ், விற்பனைக்கு விடப்பட்ட முதல் வாரத்திலேயே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
அறிமுக வார இறுதியிலேயே அவற்றில் 87 விழுக்காட்டிற்கும் அதிகமான வீடுகள், அதாவது 1,041 வீடுகள் விற்பனையாகிவிட்டதாக ‘யுஒஎல்’ குழுமம் மற்றும் கேப்பிட்டாலேண்ட் டெவலப்மன்ட் நிறுவனப் பேச்சாளர் ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 23) தெரிவித்தார்.
வீடுகளை வாங்கியோரில் பெரும்பாலோர் சிங்கப்பூரர்கள் என்றும் தாங்கள் வசிக்கவும் முதலீட்டிற்காகவும் அவர்கள் வீடுகளை வாங்குகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“முழுதும் ஒருங்கிணைந்த, தனித்துவமிக்க குடியிருப்பு, வாழ்க்கைப்பாணி மேம்பாட்டுத் திட்டமாக பார்க்டவுன் ரெசிடென்ஸ் அமையவுள்ளது. கடைத்தொகுதி, எதிர்கால தெம்பனிஸ் நார்த் எம்ஆர்டி நிலையம், பேருந்துச் சந்திப்பு நிலையம், பசுமையான அகன்ற நிழற்சாலை (boulevard), சமூக மன்றம், உணவங்காடி நிலையம் ஆகியவற்றுடன் அது நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும்,” என்று அவர் விவரித்தார்.
சராசரியாக சதுர அடி $2,360 என்ற விலைக்கு அந்தக் கூட்டுரிமை வீடுகள் விற்கப்பட்டதாக யுஒஎல் நிறுவனத்தின் திரு ஆன்சன் லிம் கூறினார்.
இதற்குமுன், பெரிய குடியிருப்புத் திட்டங்கள் எதுவும் முதலாவது வார இறுதியிலேயே 1,000 வீடுகளுக்குமேல் விற்றதில்லை என்றார் ‘ஹட்டன்ஸ் ஏஷியா’ சொத்துச் சந்தை நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் யிப்.
“முழுதும் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உள்ள வரவேற்பையும் 2025 முதல் 2030 வரை இடம்பெறும் தெம்பனிஸ் ஐந்தாண்டுப் பெருந்திட்டத்தின்மீது வீடு வாங்குவோர் கொண்டுள்ள நம்பிக்கையையும் இது காட்டுகிறது,” என்று திரு யிப் கூறினார்.
மிதிவண்டிப் பாலம், சுரங்கப்பாதை, 7.7 கிலோமீட்டர் நீள மிதிவண்டிப் பாதைகள் போன்ற மேம்பாட்டுத் திட்டங்களை உள்ளடக்கிய ஐந்தாண்டுப் பெருந்திட்டத்தைத் தெம்பனிஸ் நகர மன்றம் சனிக்கிழமை (பிப்ரவரி 22) அறிமுகப்படுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டமான பார்க்டவுன், எட்டு முதல் 13 தளங்களுடன் கூடிய, தனித்துவமிக்க 12 புளோக்குகளைக் கொண்டிருக்கும்.
பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்ட முதல் மூன்று நாள்களிலேயே அத்திட்டம் 10,000க்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது என்று இம்மாதம் 17ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.