போதைப்பொருள் புழங்கியதாக 88 பேர் கைது

2 mins read
குழந்தைகளின் படுக்கையறையில் போதைப்பொருளை மறைத்துவைத்த பெண்ணும் சிக்கினார்
7fff89eb-a43c-4de8-9624-1e51f440f175
எட்ஜ்டேல் பிளைன்ஸ் பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில் ஜனவரி 12ஆம் தேதி மேற்கொண்ட சோதனையின்போது போதைப்பொருள் சார்ந்த குற்றத்திற்காக 34 வயதுப் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். - படங்கள்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நாடு முழுவதும் ஆறு நாள்களாக மேற்கொண்ட சோதனைகளில் 88 பேர் பிடிபட்டனர்.

தம் குழந்தைகளின் படுக்கையறையில் போதைப்பொருள்களை மறைத்து வைத்திருந்த 34 வயதுப் பெண்ணும் அவர்களில் ஒருவர்.

ஜனவரி 11 முதல் 16 வரை மேற்கொண்ட சோதனைகளில் 23,000 வெள்ளிக்கும் அதிக மதிப்புடைய போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) ஓர் அறிக்கை மூலம் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

பிடோக், உட்லண்ட்ஸ், ரேஸ் கோர்ஸ் சாலை, தெலுக் குராவ் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.

எட்ஜ்டேல் பிளைன்ஸ் பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில் ஜனவரி 12ஆம் தேதி மேற்கொண்ட சோதனையின்போது அந்த 34 வயதுப் பெண் சிக்கினார்.

அப்போது, அவரது குழந்தைகளின் படுக்கையறைக் கதவிற்குப் பின்புறம் 160 கிராம் கஞ்சாவும் 59 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் ஒரு நெகிழிப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து, அந்தச் சிங்கப்பூரர் கைதுசெய்யப்பட்டார்.

மறுநாள் ஜனவரி 13ஆம் தேதி ஹவ்காங் அவென்யூ 5ல் வசிக்கும் 39 வயது ஆடவர் ஒருவரின் வீட்டிலும் போதைப்பொருள்கள் சிக்கியதைத் தொடர்ந்து, அவரையும் அதிகாரிகள் கைதுசெய்தனர். அதே வீட்டில் இருந்த 55 வயது ஆடவரும் பின்னர் கைதுசெய்யப்பட்டார். அவர் போதைப்பொருள் அடங்கிய பெட்டியை புளோக்கின் வெற்றுத்தளத்தில் இருந்த ஒரு குப்பைத்தொட்டியில் போட முயன்றதாகக் கூறப்பட்டது. அவர்கள் இருவரும் சிங்கப்பூரர்கள்.

அதே நாள் பிற்பகலில் பொங்கோல் வேயில் உள்ள ஒரு குடியிருப்பில் 50 வயது வெளிநாட்டவர் ஒருவர் போதைப்பொருள் சார்ந்த குற்றத்திற்காகப் பிடிபட்டார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகப் பேர்வழிகள் அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்