அனைத்துலக வயலின் போட்டியில் வாகை சூடிய சிங்கப்பூர்ச் சிறுவன்

அனைத்துலக வயலின் போட்டியில் வாகை சூடிய சிங்கப்பூர்ச் சிறுவன்

2 mins read
928c9044-2ee1-48b6-bb54-d1af0be60d4b
‘ஆண்ட்ரியா பொஸ்டாக்கினி 2024’ போட்டியில் வெற்றிபெற்ற டிராவிஸ் வோங், 9. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூரரான 9 வயது டிராவிஸ் வோங், இத்தாலியில் நடைபெற்ற அனைத்துலக வயலின் போட்டியில் வாகை சூடியுள்ளார்.

ஃபெர்மோ நகரில் மே மாதம் நடைபெற்ற 31வது ஆண்ட்ரியா பொஸ்டாக்கினி அனைத்துலக வயலின் போட்டியில் இச்சிறுவன் தன்னைவிட மூன்று மடங்கு அதிக வயதுடைய போட்டியாளர்களையும் வென்றுள்ளார்.

200 ஆண்டுகள் பழைமையான ‘டியேட்ரோ டெல்’அகிலா’ அரங்கில் மே 25ஆம் தேதி தன்னை மேடைக்கு அழைத்து சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட வயலினைக் கொடுத்தபோது சற்றே குழம்பிப் போனதாகக் கூறினார் டிராவிஸ்.

நிகழ்ச்சி நெறியாளர் இத்தாலிய மொழியில் பேசியதால் என்ன நடக்கிறது என்று சிறுவனுக்குச் சரியாகத் தெரியவில்லை.

“என்னை மீண்டும் வாசிக்கச் சொல்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஏன் என்னுடைய வயலினைத் தராமல் வேறு ஒன்றைத் தருகிறார்கள் என்று குழம்பினேன்,” என்று வெட்கப் புன்னகையுடன் கூறும் டிராவிசுக்கு மேடையின் பின்புறம் இருந்தவர்கள் அவர்தான் மொத்தப் போட்டியின் வெற்றியாளர் என்று விளக்கினார்கள்.

ஃபேர்ஃபீல்டு மெத்தடிஸ்ட் பள்ளியில் பயிலும் இவருக்கு ஒட்டுமொத்த வெற்றியாளர் என்பதால் 2,040 வெள்ளிக்குச் சமமான ரொக்கம் வழங்கப்பட்டது. அத்துடன், 8 முதல் 11 வயதுடையோருக்கான பிரிவிலும் அவர் வெற்றி பெற்றார்.

உலகெங்குமிருந்து 100க்கும் மேற்பட்டோர் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.

8 முதல் 32 வயது வரையிலான போட்டியாளர்கள் நான்கு பிரிவுகளில் போட்டியிட்டனர்.

மிகப் பெரிய கூட்டத்தினர்முன் வயலின் வாசித்தது இதுவே முதல்முறை என்றார் டிராவிஸ்.

மூன்று வயது முதல் வயலின் வாசிக்கும் இவர், கடந்த மூன்று ஆண்டுகளில் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபர்டு நகரில் சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தனது திறனைச் செம்மைப்படுத்திக்கொண்டார். கடந்த ஈராண்டுகளாகப் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

“என் இசையைக் கேட்போருக்கு அதன் மூலம் கதை சொல்ல விரும்புகிறேன்,” என்று கூறும் டிராவிஸ், அவர்கள் தன் இசையை ரசிப்பதைப் பார்க்கையில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறுகிறார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்போட்டிபரிசு