பொங்கோல், பிடோக் வாசிகளுக்கு சமூகப் பேரங்காடியில் 90% சிறப்புக் கழிவு

பொங்கோல், பிடோக் வாசிகளுக்கு சமூகப் பேரங்காடியில் 90% சிறப்புக் கழிவு

2 mins read
06cb2f61-ece4-4a7d-a01d-88e467eaddb3
பொங்கோல் சமூக மன்ற சமூகப் பேரங்காடியில் ஒரு 70 வயது மூதாட்டி சனிக்கிழமை (செப்டம்பர் 5) பொருள்களை வாங்கினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் பொங்கோல் சமூக மன்றம் நிர்வகிக்கும் பேரங்காடியில் அவர்களுக்கு சிறப்புச் சலுகையாக 90 விழுக்காடு கழிவு விலையில் இல்லத்துக்குத் தேவையான பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

பிடோக் ரிசர்வாயர்-பொங்கோல் குடியிருப்பு வட்டாரத்தில் வாழும் நீல நிற ‘சாஸ்’ அட்டை வைத்துள்ள குடிமக்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும்.

கலன்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், பிஸ்கட்டுகள், கழிவறைத் தாள்கள் போன்றவற்றுக்கு விற்பனை விலையில் அவர்கள் 10 விழுக்காடு கட்டணம் செலுத்தினால் போதுமானது.

எஞ்சிய 90 விழுக்காட்டுக்கான தொகை ஆண்டுதோரும் ஒவ்வொரு இல்லத்துக்கும் வழங்கப்படும் $100 மானியத்தில் கழித்துக்கொள்ளப்படும். இந்தச் சிறப்புச் சலுகைக்கு ஏறத்தாழ 3,400 வீடுகள் தகுதிபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் கிட்டத்தட்ட 200 இல்லங்கள் இதுவரை அந்தப் பேரங்காடியில் பொருள்கள் வாங்கியுள்ளனர்.

தொண்டூழியர்களால் நடத்தப்படும் அந்த அங்காடி மாதம் இரண்டு முறை சனிக்கிழமைகளில் மட்டும் இரண்டு மணி நேரத்துக்கு காலையில் திறந்திருக்கும்.

விலைவாசி குறித்து குடியிருப்பாளர்கள் முன்வைத்த கவலைகளைத் தணிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அல்ஜூனிட் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர் ஏட்ரியன் ஆங் விளக்கமளித்தார்.

குறிப்பிட்ட பொருள்களை வீடுகளுக்கு வழங்குவதைவிட சமூகப் பேரங்காடியில் அவர்களே வேண்டிய பொருள்களைத் தேர்வு செய்வது அவை வீணாகாமல் போவதைத் தடுக்க உதவும் என்று அவர் கருத்துரைத்தார்.

கடந்த 2025ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அல்ஜூனிட் குழுத்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட திரு ஆங், சமூகப் பேரங்காடிக்கும் அங்குள்ள பொதுப் பூங்காவுக்கும் சனிக்கிழமை (செப்டம்பர் 5) வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது அவரது கருத்துகளை வெளியிட்டார்.

குறிப்புச் சொற்கள்